Newsஇப்படியும் நடக்கிறது - இரா. சம்பந்தன் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின்...

இப்படியும் நடக்கிறது – இரா. சம்பந்தன் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தானா?

-

இரா. சம்பந்தன் இப்போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் தானா என்ற சர்ச்சை இரண்டு நாட்களாக ஓடத் தொடங்கியிருக்கின்றது.

தமிழ் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி உள்ளுராட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதென்று தமிழ் அரசுக் கட்சி முடிவெடுத்த பின்னரும், தமிழ் அரசு கட்சி இப்போதும் கூட்டமைப்பில்தான் இருக்கின்றது என்றும், தேர்தல் முடிவடைந்த பின்னர் கூட்டமைப்பாகச் சேர்ந்து இயங்குவோம் என்றும் தமிழ் அரசுக்காரர்கள் திரும்பத் திரும்ப கூறி மக்களைக் குழப்பிக்க்கொண்டிருக்கின்றனர்.

அவர்கள் ஏன் அப்படிக் குழப்புகின்றார்கள் என்பதைப் புரிந்துகொள்ள பெரிய அரசியல் அறிவு தேவையில்லை. இதுகாலவரை, எல்லாத் தேர்தல்களிலும், ஒன்றுமைக்காகக் கூட்டமைப்புக்கு வாக்களிக்கவேண்டும் என்று தமிழ் மக்களைத் தூண்டிய தமிழ் அரசுக்காரர்களே, இப்போது தமது தனிப்பட்ட நலன்களுக்காக அதே ஒற்றுமையைக் குலைத்து வெளியேறித் தனித்துத் தேர்தலைச் சந்திப்பது மக்களிடத்தில் எந்த அளவுக்கு எரிச்சலூட்டியுள்ளது என்பதைத் தெரிந்துகொண்ட பின்பே அப்படி அவர்கள் குழப்பிப் பேசுகிறார்கள்.

கூட்டமைப்பின் தலைவர் இப்போது யார் என்பதை கூட்டமைப்பே இன்னமும் முடிவுசெய்யவில்லை. அவரகள் அதற்கு இப்போது அவசரப்படவில்லை. வேட்பளர் தெரிவு, வேட்மனுத் தாக்கல் மற்றும் வேட்பாளர்களுக்கு அறிவூட்டல் போன்ற விடயங்களில் தமது கவனத்தைச் செலுத்திவரும் கூட்டமைப்பினர், தலைமைத் தெரிவில் காலத்தைச் செலவிடாமல் தமக்கிடையே புரிந்துணர்வுடன் தேர்தலை நோக்கி இயங்கி வருகின்றனர் என்கின்றன உள்வீட்டுத் தகவல்கள்.

கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசு தனித்து போகின்ற முடிவை எடுத்த பின்னர் இப்போது கூட்டமைப்பு ஐந்து கட்சிகளைக் கொண்ட அமைப்பாகிவிட்டது. எதிர்காலத்தில், தேர்தலுக்கு பின்னர் கூட்டமைப்பில் தமிழ் அரசு கட்சி மீண்டும் வந்து சேர்ந்து இயங்குவதென்றாலும், அந்த ஐந்து கட்சிக் கூட்டணியோடு ஆறாவது கட்சியாக வந்து சேர்ந்துதான் இயங்கவேண்டும். அதுவும், தற்போது பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி ஆகிவிட்ட கூட்டமைப்பின் ‘குத்துவிளக்கு’ சின்னத்திலேயே இயங்க வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமாகத் தமது ‘வீடு’ சின்னத்தை தமிழ் அரசுக்காரர்கள் காட்ட முடியாது.

இந்த நிலைமையில் – தமிழ் கூட்டமைப்புக்கு இப்போதும் சம்பந்தனே தலைவர் என்று தமிழ் அரசின் சிரேஷ்ட துணைத்தலைவர் சி. வி. கே. சிவஞானம் ஒரு வியாக்கியானம் கூறியிருக்கின்றார்.

அவர் சொன்னதை அப்படியே தருகின்றேன்:
‘பாராளுமன்ற தேர்தல்கள் முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சிகளும் அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அது முன்பும் அவ்வாறே நடந்தது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவு என்பது இதுவரையில் பாராளுமன்றக் குழுவாகவே இருந்திருக்கின்றது.
பாராளுமன்றக் குழு தெரிவு செய்த சம்பந்தன் இன்னும் அந்தப் பதவியில்தான் இருக்கின்றார். ஆகவே அவரை நீக்குவதோ அல்லது அந்தப் பதவியை வறிதாக்குவதோ வெறுமனே ஒர் ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது. முறைப்படியாக பாராளுமன்றக் குழு கூடி விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர பதவி வறிதாக்கல், செயலற்று போதல் என்று எதுவும் இல்லை.” – இப்படித்தான் சிவஞானம் தெரிவித்திருக்கிறார்.

2020ஆம் ஆண்டு தேர்தலில், இலங்கை தமிழ் அரசு கட்சியின் தேர்தல் சின்னமான ‘வீடு’ சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு, தமது தலைவராகச் சம்பந்தனைத் தெரிவுசெய்தது. அவ்வாறு அவர் தெரிவு செய்யப்பட்டது, பாராளுமன்றத்திற்குத் தெரிவான கூட்டமைப்பு உறுப்பினர் குழாமின் தலைவராக மட்டுமே. அவரே இப்போதும் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவின் தலைவர். அதில் குழப்பம் எதுவும் இல்லை.

இங்கே, பிரச்சனை என்னவென்றால் – மூன்று கட்சிகள் இருந்த கூட்டமைப்பிலிருந்து ஒரு கட்சி தன்னிச்சையாக முடிவெடுத்துப் பிரிந்து சென்று தேர்தலில் தனித்துப் போட்டியிட்டுக்கொண்டு, தாம் இப்போதும் கூட்டமைப்புத்தான் என்று திரும்பத் திரும்பக் கூறிக்கொண்டிருப்பது மக்களை மடையர்கள் என்று நினைப்பதற்குச் சமம். தமிழ் அரசு கட்சி என்ற ஒரு மூத்த அரசியல் கட்சிக்கு இது அழகல்ல.

தமிழ் கூட்டமைப்பை ஒரு தனியான கட்சியாகப் பதிவுசெய்ய வேண்டும் என்று அதன் பங்காளிக் கட்சிகள் தொடந்து கேட்டுக்கொண்டிருந்தன. ஆனால், தமிழ் அரசு அதற்கு மறுத்துவந்தது. அப்படி அது பதிவுசெய்யப்பட்டிருந்தால், பதிவு செய்யப்பட்ட அந்த கட்சியின் தலைவராக சம்பந்தன் தெரிவுசெய்யப்பட்டிருந்தால் – தமிழ் அரசு கட்சி இப்போது வாதிடுவதிலும் ஒரு சிறிய நியாயம் இருந்திருக்கும்.

சம்பந்தன், தமிழ் இனத்தின் ஒரு மூத்த மதிப்புக்குரிய தலைவர்தான். அதில் சந்தேகமில்லை. ஆனால், அதற்காக, அவரது கட்சி கூட்டமைப்பைவிட்டேவெளியேறிய பின்னரும், அவரே இப்போதும் கூட்டமைப்பின் தலைவர் என்று அடம்பிடிப்பது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. அவரது கட்சிக்காரர் அவரையே அவமதிக்கும் ஒரு செயல் அது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் – உள்ளுராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடந்த போது – வேட்புமனுக்களைச் சரிபார்த்துச் சமர்ப்பிக்க, தமிழ் அரசு கட்சியின் யாழ் அலுவலக்தில், கட்சியின் தலைவரும், சிரேஷ்ட துணைத் தலைவரும், இன்னும் சிலரும் காத்திருக்க, அவர்களுக்கே தெரியாமல், சுமந்திரனின் யாழ் இல்லத்தில் வேட்புமனுக்கள் சரிபார்க்கப்பட்டு, அங்கிருந்தே எடுத்துச் செல்லப்பட்டுத் தாக்கல் செய்யப்பட்ட விநோதத் தகவலை நேற்றைய பத்தியில் விபரித்திருந்தேன்.

தமிழ் அரசு கட்சியின் உள்வீட்டுச் சீத்துவக்கேடு இந்த லட்சணத்தில் இருக்க, தாங்கள்தான் இப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் தலைவர்கள் என்று தமக்குத் தாமே அவர்கள் கொம்புசீவிக்கொண்டிருப்பது சிரிப்புக்கிடமானது.

முதலில், தமிழ் அரசு கட்சி, சிற்றரசர்கள் போலப் பிரிந்து கிடக்கும் தனது கட்சிக்காரர்களை ஒன்றிணைத்து ஆளுமையான தலைமையோடு பயணிக்க வேண்டும். அதற்குப் பின்னர், வேண்டுமானால், ஏனைய அனைத்து கட்சிகளதும் கூட்டுக்கு தலைமை வகிக்கத் தனக்கு இருக்கும் தகுதி பற்றி அது பேசலாம். தர்மலிங்கம் சித்தார்த்தனும் செல்வம் அடைக்கலநாதனும் வழங்கும் தலைமைக்கு, அவர்களது கட்சிக்காரர்கள், எவ்வளவு ஒருங்கிணைப்புடன் கட்டுப்பட்டு நடக்கின்றார்கள் என்பதிலிருந்து தமிழ் அரசு கட்சியினர் பாடத்தை கற்க வேண்டும்.

முத்தாய்ப்பாக ஒரு தகவல் சொல்லுகிறேன்: கூட்டமைப்பை விட்டு வெளியேறி, உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் அரசு கட்சி தனித்துப் போட்டியிடுவது என்று அதன் மத்திய குழு மட்டக்களப்பில் முடிவெடுத்த பின்னர், அது தொடர்பாகப் பேசி ஒரு முடிவை எடுப்பதற்காக தமிழ் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேசினார்கள். கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தாம் தனித்து போட்டியிடும் முடிவை அங்கு அறிவித்தனர் தமிழ் அரசு கட்சியினர். அப்போது – தாம் எவ்வாறு போட்டியிடப்போகின்றோம் என்பதைத் தமக்குள் பேசித் தீர்மானிப்பதாக அறிவித்துவிட்டு வெளியேறினர், கூட்டமைப்பின் ஏனைய இரண்டு பங்காளி கட்சிகளான புளொட்டும் ரெலோவும். இவ்வாறு – தமிழ் அரசு பிரிந்து போவதென்று முடிவாகி, ஏனைய இரண்டு கட்சியினரும் சேர்ந்தே போவர் என்பதும் தெளிவாகிய அந்த கட்டத்தில், தமிழ் அரசு கட்சியினரைப் பார்த்து சம்பந்தன் கேட்டாராம்: “அப்படியென்றால், தமிழ் அரசு கட்சி கூட்டமைப்பிலிருந்து பிரிந்து வெளியேறுகின்றதா?!” என்று.

ஆக, ஐயா சம்பந்தன் தனது நிலை குறித்துத் தெளிவாகத்தான் இருக்கிறார். அவரின் சீடர்கள்தான் தாங்களும் குழம்பி, மக்களையும் குழப்பிக்கொண்டிருக்கின்றார்கள்.

-ஊர்க்குருவி

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...