டவுன் சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்ட மகன் காரணமாக ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் இருந்த இந்தியக் குடும்பத்துக்கு இந்நாட்டில் நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரத்தில் குடிவரவு அமைச்சர் ஆன்ட்ரூ கில்ஸின் நேரடித் தலையீட்டால், அவர்களுக்கு அவுஸ்திரேலிய வதிவிட உரிமை வழங்கப்பட்டுள்ளதுடன், மருத்துவக் காப்பீடு உள்ளிட்ட ஏனைய வசதிகளுக்கான வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்த குழந்தையின் சுகாதார வசதிகளுக்காக 10 ஆண்டுகளில் செலவிடப்படும் தொகை சுமார் 664,000 டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் செலுத்தும் வரிப் பணத்தில் இருந்து அவுஸ்திரேலிய அரசாங்கம் அந்தத் தொகையை ஏற்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்தக் குடும்பத்திற்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்றும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் செய்திகள் வெளியாகின.
குறித்த குழந்தையின் பெற்றோர்கள் அவுஸ்திரேலியாவிற்கு இணையப் பாதுகாப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு மிக அவசியமான துறைகளில் பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.