உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியும் ஒன்றாகும். ஒலிம்பிக் போட்டியை போலவே உலக கிண்ண கால்பந்து 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகின்றது.
கடைசியாக உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கடந்த ஆண்டு கத்தாரில் நடந்தது. கத்தாரில் நடந்த 22-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் அர்ஜெண்டினா சாம்பியன் பட்டம் பெற்றது.
மெஸ்சி தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டியில் பிரான்சை வீழ்த்தியது. 23-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி கனடா, மெக்சிகோ, அமெரிக்காவில் நடத்தப்படுகின்றது.
2026-ம் ஆண்டு ஜுன் 11-ம் திகதி முதல் ஜூலை 19-ம் திகதி வரை இந்த போட்டி இடம்பெறவுள்ளது.இந்த உலக கிண்ண போட்டியில் மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கின்றன. கடந்த உலக கிண்ணத்தை விட 16 நாடுகள் கூடுதலாக பங்கேற்கின்றன.
கத்தார் உலக கிண்ணம் 32 அணிகள் பங்கேற்றன. உலக கிண்ணத்தில் விளையாடும் 48 அணிகளும் 12 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்று இருக்கும். முதலில் 16 பிரிவாக பிரிக்க முடிவு செய்யப்பட்டது. அதாவது ஒரு பிரிவில் 3 நாடுகள் இடம் பெறுவது என்று திட்டமிடப்பட்டது.
தற்போது சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதை மாற்றி 12 பிரிவாக பிரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மொத்தம் 104 ஆட்டங்கள் நடைபெறும். கத்தார் உலகக்கிண்ணத்தை விட 40 போட்டிகள் கூடுதலாகும்.கடந்த உலக கிண்ணத்தில் மொத்தம் 64 ஆட்டங்கள் நடத்தப்பட்டது.
நன்றி தமிழன்