91 வயதான மூதாட்டி ஒருவர் மோசடிக்காரர்களை பிடிப்பதற்கு உதவுவதாக நினைத்துக்கொண்டு, அவர்களிடமே 5 லட்சம் டொலர்களை இழந்த சோகக்கதை இது.
குயின்ஸ்லாந்து மாநிலத்தில் கணவன் இன்றி வாழ்ந்துவந்த 91 வயது மார்கரெட்டிடம் வாழ்நாள் சேமிப்பாக 5 லட்சம் டொலர்கள் அவர் வசம் இருந்திருக்கிறது.
ஒரு நாள் இணையமோசடியில் ஈடுபடும் நபர் மார்கரெட்டைத் தொடர்புகொண்டு தனது பெயர் ஆண்ட்ரூ வில்லியம் என்றும், மோசடிக்கார்களைக் கண்டறிய ஆஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறையுடன் இணைந்து தான் பணியாற்றி வருவதாகவும் கூறியிருக்கிறார்.
காவல்துறை அதிகாரிபோல் வேடம் அணிந்த அந்நபர், மார்கரெட்டின் பணத்தை யாரோ திருட முயற்சிப்பதாகவும், அவர் தனது பணத்தை வேறு வங்கிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறார்.
ஒரு பாதுகாப்பான வங்கியில் பணத்தை வைக்குமாறும், இதன்மூலம் காவல்துறையினரால் இணையத்திருடர்களைக் கண்காணிக்க முடியும் எனவும் மார்கரெட்டிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நண்பர்களிடமோ அல்லது குடும்பத்தினரிடமோ இதைச் சொல்ல வேண்டாம் என்றும் அது காவல்துறையினரின் இரகசிய நடவடிக்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் மார்கரெட்டை ஏமாற்றிய நபர் அவரை நம்பவைத்திருக்கிறார்
மோசடி செய்பவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறைக்கு உதவுவதாக நினைத்த மார்கரெட் சுமார் 10 மாத இடைவெளியில் தன்னிடமிருந்த கிட்டத்தட்ட அரை மில்லியன் டொலர்களை வெவ்வேறு வங்கிக்கணக்குகளுக்கு மாற்றியிருக்கிறார்.
மார்கரெட் தனது புதிய கணக்கு ஒன்றில் இருந்து பணம் எடுக்க முயன்றபோது அது ஒரு மோசடி என்பதை உணர்ந்தார். தான் ஏமாற்றப்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தபோது அரை மில்லியன் டொலர்களை அவர் இழந்துவிட்டார்.
ஏனையோருக்கு விழிப்புணர்வூட்டும்வகையில் தனது இக்கதையை மார்கரெட் A Current Affair-இடம் பகிர்ந்திருந்தார்.