அமெரிக்காவின் தென்கிழக்கில் உள்ள மாநிலம் புளோரிடா. இதன் தலைநகரம் டல்லஹாசீ. இம்மாநிலத்தின் மத்திய மேற்கு பகுதியில் பினாலஸ் கவுன்டி பகுதி அமைந்துள்ளது.
இப்பகுதியின் ஷெரீப் அலுவலகத்திற்கு அங்குள்ள நீர்நிலை ஒன்றில் ஒரு உடல் தென்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து உடனடியாக அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
சம்பவ இடமான ரிட்ஜ்க்ரெஸ்ட் பகுதியில் 121-வது தெருவிற்கும் 134-வது வடக்கு நிழற்சாலைக்கும் அருகில் உள்ள நீர்நிலையில் ஒரு 13-அடி நீள முதலை தென்பட்டுள்ளது.
அதன் வாயில் ஒரு மனித உடலின் பாகம் தெரிந்தது. இதனையடுத்து ஷெரீப் உத்தரவின் பேரில் அந்த முதலை சுடப்பட்டது.
அதிகாரிகள் அதன் வாயிலிருந்த மனித உடல் பாகங்களை ஆய்வுக்காக பத்திரமாக வெளியில் எடுத்துள்ளனர்.
இந்த நடவடிக்கைக்கு ஷெரீப் அலுவலகத்தினருடன் அம்மாநில மீன் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு ஆணைய அதிகாரிகளும் இணைந்து செயற்பட்டுள்ளனர்.
விசாரணையில், இறந்தது 41 வயதான சப்ரீனா பெக்காம் எனும் பெண்மணி என தெரிய வந்துள்ளது. சில மணி நேரம் நடைபெற்ற இந்த நடவடிக்கையை நேரில் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியி அடைந்துள்ளனர்.