விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட வரி சட்ட விரோதமானது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்த தீர்ப்பின்படி, எந்த மாநில அரசும் எலக்ட்ரிக் அல்லது ஹைபிரிட் வாகனங்களுக்கு சட்டவிரோதமாக வரி விதிக்க அனுமதிக்கப்படவில்லை.
மின்சார வாகனங்கள் பயணிக்கும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் 02 சென்ட் வரி அறவிடுவதன் மூலம் விக்டோரியா அரசினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறையை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் போதே உயர்நீதிமன்றம் இதனைத் தெரிவித்துள்ளது.
2027-ம் ஆண்டுக்குள் மேலும் இரு மாநிலங்களும் இதேபோன்ற வரிகளை விதிக்க உள்ள நிலையில், உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள மின்சார வாகன உரிமையாளர்களுக்கு கிடைத்த வெற்றி என்று கூறப்படுகிறது.
விக்டோரியா மாநிலத்தில் மின்சார வாகனங்களுக்கு வரி விதிப்பது நியாயமற்றது என்று மாநில அரசின் ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் சமீபத்தில் தெரியவந்தது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்களுக்கு சாலைப் பராமரிப்புக்கு விதிக்கப்படும் வரிக்கு இணையான வரி விதிக்கப்படும் என்றும், அது தீங்கு விளைவிக்கும் காற்று மாசுவைத் தடுக்கும் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்பன் உமிழ்வு இலக்குகளை எட்டுவதற்கு மின்சார வாகனங்களுக்கு அதிக சலுகைகள் வழங்கப்பட வேண்டிய சூழ்நிலையில் அதிக வரி விதிப்பதை ஏற்க முடியாது என ஒம்புட்ஸ்மேன் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.