வெப்பநிலை அதிகரிப்பால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியாவின் மத்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளில் அதிகபட்ச சராசரி வெப்பநிலை பதிவான ஆண்டாக 2023 கருதப்படுகிறது.
பல பிரதேசங்களில் வெப்பநிலை 40 பாகை செல்சியஸை அண்மித்துள்ளதாகவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனால் மக்களுக்கு பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறையினர் கருதுகின்றனர்.
அது தொடர்பில் அவதானம் செலுத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம், தற்போதைய நிலைமை தொடர்பில் மாநில அரச பிரதிநிதிகள் மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடியுள்ளது.
அதிக வெப்பநிலையை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய சில நடவடிக்கைகள் அங்கு இனங்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 10 வருடங்களில் அவுஸ்திரேலியாவை பாதித்த வெப்பமான காலநிலை காரணமாக சுமார் 300 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார மற்றும் நலன்புரி அவுஸ்திரேலியா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏழாயிரத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.