மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது.
ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ”ஹிகுமா” எனும் பழுப்பு நிற கரடிகள் வாழ்கின்றன.
அதேபோல் ”சுகினோவாகுமா” எனும் ஆசிய கருப்பு கரடிகள் நாட்டின் 47 மாகாணங்களில் 33 மாநிலங்களில் வாழ்கின்றன. இதனால் அவற்றின் எண்ணிக்கை மற்றும் வாழ்விடங்கள் பல பகுதிகளில் அதிகரிக்கின்றன.
மேலும், 2023ஆம் ஆண்டில் 219 பேர் கரடி தாக்குதலுக்கு உள்ளாகினர். இது இதுவரை பதிவு செய்யப்படாத அதிகபட்சமாகும். அத்துடன் அவர்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து அந்த ஆண்டில் பிடிபட்ட கரடிகளின் எண்ணிக்கை 9,319 ஆக உயர்ந்தது. அதன் பின்னர் பிப்ரவரி மாதம் அமைச்சகத்தின் நிபுணர்கள் குழு, இரு வகையான கரடிகளையும் கட்டுப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்க்க முன்மொழிந்தது.
அதன்படி தற்போது விவசாய அமைச்சகம் மற்றும் நில அமைச்சகத்தின் ஒத்துழைப்புடன் கரடி சேதக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதன்மூலம் அழித்தல் மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக, மத்திய அரசின் மானியங்களை அனுமதிக்கும் பட்டியலில் இரண்டு கரடி இனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக 16ஆம் திகதி தெரிவிக்கப்பட்டது.