ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சுனில் நரைன் – சால்ட் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கினர். முதல் விக்கெட்டுக்கு 61 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்த நிலையில் அதிரடியாக விளையாடிய சால்ட் 32 ஓட்டங்களில் (14 பந்துகள்) ஆட்டமிழந்தார்.
பின்னர் ரகுவன்ஷி – சுனில் நரைன் ஜோடி சேர்ந்தனர். இதில் ரகுவன்ஷி நிதான ஆட்டத்தை கடைபிடிக்க மறுமுனையில் சுனில் நரைன் அதிரடியாக விளையாடினார். லக்னோ பந்து வீச்சை வெளுத்து வாங்கிய அவர் 39 பந்துகளில் 81 ஓட்டங்கள் அடித்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அவரை தொடர்ந்து களமிறங்கிய ரசல் 12 ஓட்டங்களிலும், நிதானமாக விளையாடிய ரகுவன்ஷி 32 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ரிங்கு சிங் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்து இந்த முறையும் ஏமாற்றம் அளித்தார்.
கடைசி கட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரமன்தீப் சிங் அதிரடியாக விளையாடி அணி வலுவான நிலையை எட்ட உதவினர். ஸ்ரேயாஸ் 15 பந்துகளில் 23 ஓட்டங்கள் அடித்த நிலையில் ஆட்டமிழக்க ரமன்தீப் சிங் 6 பந்துகளில் 25 ஓட்டங்கள் அடித்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக சுனில் நரைன் 81 ஓட்டங்கள் அடித்தார். லக்னோ தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனை தொடர்ந்து 236 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய லக்னோ அணி 16.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது. அதன்படி 98 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.