போக்குவரத்து நெரிசல் மற்றும் வாழ்க்கைச் செலவைக் குறைக்கும் முயற்சியாக குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களைத் தற்காலிகமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனால், குயின்ஸ்லாந்தில் அனைத்து பொது போக்குவரத்து கட்டணங்களும் 50 சென்ட் கட்டணத்தில் கிடைக்கும்.
ஆகஸ்ட் 5 முதல் ஆறு மாத காலத்திற்கு, தூரத்தைப் பொருட்படுத்தாமல், மாநிலத்தில் உள்ள அனைத்து டிரான்ஸ்லிங்க் சேவைகளுக்கும் புதிய கட்டணம் பொருந்தும் என்று மாநிலப் பிரதமர் ஸ்டீபன் மைல்ஸ் இன்று காலை அறிவித்தார்.
இந்த சோதனை வேலைத்திட்டத்தின் மூலம் மக்கள் ஏனைய பில்களுக்கு ஒதுக்குவதற்கு ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்க முடியும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சலுகைகள் இருந்தபோதிலும், மாநிலத்தில் பொது போக்குவரத்து இன்னும் கோவிட்-க்கு முந்தைய நிலையை எட்டவில்லை என்றும் பிரதமர் சுட்டிக்காட்டுகிறார்.
இந்த 50 சென்ட் கட்டண சோதனையானது மக்கள் பொதுப் போக்குவரத்திற்குத் திரும்புவதற்கான காரணத்தை உருவாக்கும் என்றும், இதன் மூலம் அனைவரும் பயனடைவார்கள் என்றும் நம்பப்படுகிறது.
இந்த வழித்தடத்தில் ஒரு பேருந்தை இயக்குவதன் மூலம், 50 கார்களை சாலையில் இருந்து அகற்ற முடியும் என்றும், ஒரு பிரதான பாதையில் ஒவ்வொரு ரயிலிலும் 600 கார்களை குறைக்க முடியும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் கேமரூன் டிக் குறிப்பிட்டார்.
இந்தக் கட்டணங்களைக் குறைத்து போக்குவரத்து நெரிசலையும் குறைத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு நிரந்தரமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.