எதிர்வரும் நாட்களில் விக்டோரியாவின் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (BoM) தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில், குயின்ஸ்லாந்து மற்றும் நியூ சவுத் வேல்ஸின் சில பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் தென்கிழக்கு பகுதிகளிலும், நியூ சவுத் வேல்ஸின் வடகிழக்கு பகுதிகளிலும் பலத்த காற்று, ஆலங்கட்டி மழை மற்றும் உள்ளூர் வெள்ளம் ஏற்படக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் (BoM) தெரிவித்துள்ளது.
பல பிரதேசங்களில் பலத்த மழை பெய்யும் எனவும் 2 செ.மீ விட்டம் கொண்ட ஆலங்கட்டி மழை பெய்யக்கூடும் எனவும் மணிக்கு 90 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய அவுஸ்திரேலியாவில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இந்த காலநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தின் மத்திய மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் வெள்ளிக்கிழமை வரை சூறாவளி நிலை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.