Facebook, Instagram மற்றும் Whatsapp உள்ளிட்ட வலைத்தளங்களை இயக்கி வரும் சமூக ஊடகங்களில் ஒன்றான Meta நிறுவனம் சமீபத்தில் அதன் கொள்கையில் சில மாற்றங்கள் பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதுவரை வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த உண்மை கண்டறியும் நடைமுறையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதன்படி, தகவல்களைச் சரிபார்க்கும் திட்டக் கொள்கை கைவிடப்படும் என்ற முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அதன் தளங்களில் வெறுப்பு பேச்சு மற்றும் தவறான தகவல் பரிவர்த்தனை பற்றிய விடயங்களில் இதுவரையில் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகள் கைவிடப்படுகின்றன என Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தச் சூழலில், உண்மை கண்டறியும் நடைமுறையில் வழக்கமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த கொள்கைகளைக் கைவிடுவது பற்றி விளக்கமளிக்கும்படி கோரி மெட்டா நிறுவனத்திற்கு பிரேசில் அரசாங்கம் அறிக்கை அனுப்பியுள்ளது. இதற்காக 72 மணிநேர காலக்கெடுவும் விதித்துள்ளது.
குறித்த அறிக்கையில் , குழந்தைகள் மற்றும் முதியவர்கள், ஆபத்து சூழலிலுள்ள பாதுகாப்பற்ற மக்கள் மற்றும் வணிகச் சூழலைப் பாதுகாக்க கடுமையான சட்ட நடைமுறையை பிரேசில் கொண்டுள்ளது. டிஜிட்டல் படுகொலை மற்றும் காட்டுமிராண்டித்தனம் ஆகியவற்றால் இந்தச் சூழலை மாற்ற நாங்கள் அனுமதிக்க முடியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று, பிரேசில் நிதி அமைச்சர் பெர்னாண்டோ ஹத்தட்டின் AI வீடியோ ஒன்றை நீக்கும்படி Meta நிறுவனத்திற்கு அறிக்கையொன்றை அனுப்பியுள்ளார். கடந்த காலங்களில், TikTok மற்றும் X போன்ற வலைதளங்களுக்கு எதிராக தற்காலிக சேவை முடக்கம் என்ற சட்ட ரீதியிலான நடைமுறையைப் பிரேசில் எடுத்துள்ளது.