இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் பேரணி நடைபெற்றுள்ளது.
ஆஸ்திரேலியாவில், கல்வி மற்றும் வேலைக்காக 10 லட்சம் அதிகமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இந்தியர்களின் குடியேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.
March for Australia என்ற பெயரில் நடந்த இந்த பேரணி, சிட்னி, மெல்பேர்ண், அடிலெய்ட் மற்றும் கான்பெரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடைபெற்றுள்ளது.
இதில், சிட்டினியில் நடைபெற்ற பேரணியில் மட்டும் 5,000 முதல் 8,000 வரையிலான மக்கள் கலந்து கொண்டனர்.
“100 ஆண்டுகளில் கிரேக்கர்கள் மற்றும் இத்தாலியர்கள் வந்ததை விட, 5 ஆண்டுகளில் அதிகளவிலான ஆஸ்திரேலியர்கள் வருகை தந்துள்ளனர். இது ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது” என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற பேரணியில் நாடாளுமன்ற உறுப்பினர் பாப் கட்டார் கலந்து கொண்டுள்ளார்.
அசம்பாவிதங்களை தவிர்க்க, 100க்கும் அதிகமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். சில இடங்களில், போராட்ட குழு மற்றும் காவல்துறையினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில், காவல்துறையினர் இருவர் காயமடைந்தனர். போராட்ட குழுவை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தை கண்டித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, “இனவெறி மற்றும் தங்கள் நாட்டு கலாச்சாரம் மட்டுமே என்ற எண்ணத்தில் வெடித்துள்ள இந்த போராட்டத்திற்கு நவீன அவுஸ்திரேலியாவில் இடம் இல்லை. பல்வேறு கலாச்சாரம் நமது தேசிய கலாச்சாரத்தின் ஒருங்கிணைந்த மற்றும் மதிப்பு மிக்க பகுதி ஆகும்.” என தெரிவித்துள்ளது.
இந்த பேரணியை கடுமையாக எதிர்க்கிறோம் என தொழிலாளர் கட்சியின் மூத்த அமைச்சர் முர்ரே வாட் தெரிவித்துள்ளார்.