டாஸ்மேனியாவில் மேலும் ஒருவருக்கு தட்டம்மை நோய் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடந்த மாதம், பிரிஸ்பேர்ணில் இருந்து ஹோபார்ட்டுக்கு வந்த ஒரு இளைஞன் தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்டு ராயல் ஹோபார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிரிஸ்பேர்ணில் இருந்து பயணம் செய்த மற்றொரு இளைஞனுக்கு தட்டம்மை நோய் தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை இன்று அறிவித்துள்ளது.
அவர் தெற்கு டாஸ்மேனியாவில் வசிக்கிறார், தற்போது வீட்டில் தனிமையில் குணமடைந்து வருகிறார்.
பாதிக்கப்பட்டிருந்தபோது அந்த இளைஞன் பயணம் செய்த பகுதிகளையும், தொற்று ஏற்பட்டிருக்கக்கூடிய இடங்களையும் அடையாளம் காண, தொடர்புத் தடமறிதல் ஏற்கனவே நடைபெற்று வருவதாகத் துறை கூறுகிறது.
தட்டம்மை என்பது இருமல் அல்லது தும்மல் மூலம் காற்றின் மூலம் பரவும் ஒரு வைரஸால் ஏற்படும் மிகவும் தொற்று நோயாகும்.
இதன் அறிகுறிகளில் காய்ச்சல், மூக்கு ஒழுகுதல், கண்கள் சிவத்தல், தோலில் சிவப்பு புள்ளிகளுடன் கூடிய சொறி, இருமல் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், தட்டம்மை நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது சுகாதாரத் துறையின் இணையதளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொது தொற்று இருப்பிடத்தைப் பார்வையிட்டவர்கள், தொற்று ஏற்பட்ட 18 நாட்கள் வரை தட்டம்மை அறிகுறிகளைக் கண்காணிக்க வேண்டும்.
அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.





