சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது.
இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான மற்றும் அதிநவீனத் தாக்குதல்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் Safari மற்றும் iOS-இல் உள்ள பிற இணைய உலாவிகளால் பயன்படுத்தப்படும் ‘WebKit’ எனும் browser engine-இல் இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ஹேக்கர்கள் உருவாக்கியுள்ள இணையதளம் ஒன்றை ஒரு பயனர் பார்வையிடுவதன் மூலம், அவரது சாதனத்தில் ஊடுருவித் தரவுகளைத் திருட அல்லது தீங்கிழைக்கும் நிரல்களை இயக்க இக்குறைபாடு வழிவகுக்குமென குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் பரவலாக இடம்பெறவில்லையென்றும், குறிப்பிட்ட சில தனிநபர்களை இலக்கு வைத்து நடத்தப்பட்டிருப்பதாகவும் அப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
எவ்வாறாயினும், பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்தத் தாக்குதல்களுக்குப் பின்னணியில் யார் இருக்கிறார்கள் அல்லது யார் இலக்கு வைக்கப்பட்டார்கள் என்ற விபரங்களை நிறுவனம் வெளியிடவில்லை.
உங்கள் iPhone மற்றும் iPad சாதனங்களில் உடனடியாக மென்பொருள் பதிப்பை புதுப்பிக்கவும். சமீபத்திய பாதுகாப்புத் திருத்தங்களை நிறுவுவதன் மூலம் ஹேக்கர்களின் ஊடுருவலைத் தடுக்க முடியும். ‘Zero-day’ குறைபாடுகளிலிருந்து தற்காத்துக்கொள்ள குறித்த நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.





