காஷ்மீரில் பொது மக்களை குறிவைத்து தாக்கும் புதிய தீவிரவாத அமைப்பு

0
279

இந்தியாவில் ‘காஷ்மீர் சுதந்திர போராளிகள்’ அமைப்பின் செயல்பாடுகள் வித்தியாசமாக இருப்பதால், உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படையினருடன் இணைந்து காஷ்மீர் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். தற்கொலை படைகளை போல இல்லாமல், இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் சிறிய ரக பிஸ்டல் துப்பாக்கிகளை பயன்படுத்தி மிகவும் அருகிலிருந்து சுட்டு பலர் உயிரை பலி கொண்டுள்ளனர். அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் நுழைந்து கொலைவெறி தாக்குதல்களை இவர்கள் நிகழ்த்தியுள்ளனர் என காஷ்மீர் போலீசார் சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைகளில் உளவுத்துறை மற்றும் பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர். ஆகவே இந்த அமைப்பை சேர்ந்தவர்கள் காஷ்மீர் பகுதியை நன்கு அறிந்த உள்ளூர் இளைஞர்களாக இருக்கலாம் என உளவுத்துறையை சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நடத்திய ஆலோசனை கூட்டத்தில் இந்த புதிய தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெற்றது. இந்த மாத இறுதியில் தொடங்க உள்ள அமர்நாத் யாத்திரை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெற்றது.

‘காஷ்மீர் ஃபிரிடம் ஃபைட்டர்ஸ்’ (Kashmir Freedom Fighters) என தன்னை அழைத்துக்கொள்ளும் இந்த அமைப்பு சமீபத்தில் அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரி, போலீஸ் அதிகாரி, ஆசிரியர், கலைஞர் என பல சாதாரண மக்களை சுட்டுக்கொன்றுள்ளது. காஷ்மீர் போலீஸ் தகவல்படி, “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” அமைப்பால் கொல்லப்பட்டோர் ராணுவம் மற்றும் பாதுகாப்பு படைகளை சேராதோர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து ஊரடங்கு மற்றும் கோவிட்-19 முழுமுடக்கம் என சட்டம்-ஒழுங்கு சூழல் பெரும்பாலும் கட்டுக்குள் இருந்தது. அந்த சமயத்தில் இணையத்தளம் மூலம் இளைஞர்களை “காஷ்மீர் சுதந்திர போராளிகள்” தீவிரவாத அமைப்பு அணுகி அவர்களில் பலரை மூளை சலவை செய்திருப்பதாக உளவுத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர்.

Previous article‘விக்ரம்’ பட வெற்றி.. இயக்குனருக்கு கார், உதவி இயக்குனர்களுக்கு பைக் பரிசு வழங்கிய கமல்ஹாசன்
Next articleஇறந்த கணவர் பாம்பாக வந்துள்ளார்’ – வீட்டிற்குள் புகுந்த பாம்புடன் வாழும் பெண்