பரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) கால்பந்தாட்டக் கழகத்திலிருந்து அர்ஜென்டீனா வீரர் லயனல் மெஸி 2 வாரங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
கழகத்தின் அனுமதியின்றி சவூதி அரேபியாவுக்கு மெஸி சுற்றுலா சென்றமையே இதற்கான காரணம் என கழக வட்டாரங்கள் தெரிக்கின்றது.
கத்தாரில் கடந்த டிசெம்பர் மாதம் உலகக் கிண்ணத்தை வென்ற அர்ஜென்டீனா அணியின் தலைவரான லயனல் மெஸி, பிரான்ஸிலுள்ள பரிஸ் செயின்ட் ஜெர்மைன் கழகத்துக்காகவும் 2021 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் விளையாடி வருகிறார்.
7 தடவைகள் பெலோன் டி’ ஓர் விருதை வென்ற மெஸி பிஎஸ்ஜி கழகத்தின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக திகழ்கிறார்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற, லோறியட்ன் கழகத்துடனான போட்டியில் மெஸி பங்குபற்றினார். இப்போட்டியில் 3:1 விகித்தில் பிஎஸ்ஜி கழகம் தோல்வியுற்றது. இத்தோல்வியின் பின்னர், பிஎஸ்ஜி கழகத்தின் வீரர்களுக்கு கடந்த திங்கட்கிழமை பயிற்சியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால், இப்பயிற்சியில் பங்குபற்றாமல், தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவுக்கு மெஸி சென்றார். சவூதி சுற்றுலாத்துறையுடனான தனது ஒப்பந்தத்தின் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அங்கு மெஸி சென்றிருந்தார்.
இந்நிலையில், தனது அனுமதியின்றி, பயிற்சியை தவிர்த்துவிட்டு சவூதி அரேபியாவுக்கு சென்றதால் மெஸியை தண்டிப்பதற்கு பிஎஸ்ஜி நிர்வாகம் தீர்மானித்தது.
இதனால், 2 வாரங்களுக்கு அக்கழகத்திலிருந்து மெஸி இடைநிறுத்தப்பட்டுள்ளார் என பல்வேறு பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நன்றி தமிழன்





