ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டம் பஹாநகர் பஜார் ரயில் நிலையம் அருகே விபத்து நடைபெறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு நேற்று மாலை 6.55 மணியளவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பஹாநகர் சந்திப்பில் இருந்து மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது.
அந்த தண்டவாளத்தில் ஏற்கனவே சரக்கு ரயில் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மணிக்கு 127 கிலோமீற்றர் வேகத்தில் சரக்கு ரயில் நின்றுகொண்டிருந்த மாற்று தண்டவாளத்தில் சென்றுள்ளது.
அப்போது, சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயின் பெட்டிகள் தடம்புரண்டு அருகில் இருந்த தண்டவாளத்தில் விழுந்துள்ளது.
அப்போது அந்த தண்டவாளத்தில் பெங்களூரு-ஹவுரா சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் வந்துள்ளது. இதனால், தண்டவாளத்தில் தடம்புரண்டு கிடந்த சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் மீது பெங்களூரு-ஹவுரா சுப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் மின்னல் வேகத்தில் மோதியது.
இதில், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தூக்கி வீசப்பட்டன. இந்த கோர விபத்தில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகளுன் தடம் புரண்டன.
இந்த கோர விபத்தில் மொத்தம் 280 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 900-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஷாலிமார்-சென்னை சென்டிரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளான நிலையில் இந்த ரயிலில் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பலர் பயணித்துள்ளதால் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
அதேவேளை விபத்தில் உயிரிழந்த 280 பேரின் விவரங்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிக்னல் மற்றும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒதுக்கப்பட்ட தண்டவாளத்தில் இருந்து மாறி சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் நிறுத்தப்பட்டிருந்த மாற்று தண்டவாளத்தில் தவறுதலாக சென்று சரக்கு ரயில் மீது மோதியிருக்கலாம்.
இதன் காரணமாக கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு அருகில் இருந்த மற்றொரு தண்டவாளத்தில் தடம் புரண்டிருக்கலாம் அப்போது அவ்வழியாக வந்த பெங்களூரு-ஹவுரா எஸ்பிரஸ் ரயில் கோரமண்டல் ரெயில் பெட்டிகள் மீது மோதி பெரும் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.