எவரெஸ்ட்டில் உருகும் பனிப்பாறைகள்…நேபாளம் எடுத்த அதிரடி முடிவு

0
293

எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை இடமாற்றம் செய்ய நேபாளம் தயாராகி வருகிறது. புவி வெப்பமயமாதல் மற்றும் மனித செயல்பாடுகள் ஆகியவற்றால் இந்த இடம் பாதுகாப்பற்றதாகி வருவதால் இந்த முடிவு மேற்கொள்ளப்படுகிறது. வசந்த காலத்தில் எவரெஸ்ட் மலை ஏறக்கூடிய சுமார் 1,500 பேர் வரை பயன்படுத்தும் விதமான இந்த பேஸ் கேம்ப், வேகமாக உருகி வரும் கும்பு பனிமலைக்கு அருகில் அமைந்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து தற்போது இருப்பதை விட குறைவான உயரத்தில் ஒரு புதிய மாற்று இடத்தில் இந்த ‘பேஸ் கேம்ப்’ அமைக்கப்படும் என்று அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். உருகும் பனி நீரானது பனிமலையின் நிலைத்தன்மையை உருக்குலைக்கிறது என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள் என்றால், முகாம்களில் உறங்கிக் கொண்டிருக்கும்போதே விரிசல்கள் ஏற்படுகின்றன என்று மலையேற்ற வீரர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து நேபாள சுற்றுலாத்துறை இயக்குநரான தாரநாத் அதிகாரி பேசும்போது, “மாற்று இடத்துக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். இது தொடர்பாக பங்குதாரர்கள் அனைவரிடமும் ஆலோசனைகளும் நடைபெற்று வருகின்றன” என்று தெரிவித்தார். “மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை தகவமைத்துக்கொள்ளும் விவகாரம் தான் இது. அதுபோக மலையேறும் வணிகத்தின் நிலைத்தன்மைக்கும் இது இன்றியமையாததாகி விட்டது.”

முகாம் தற்போது 5,364 மீட்டர் உயரத்தில் உள்ளது. புதிய முகாம் இதிலிருந்து 200 மீ முதல் 400 மீ வரையிலான தூரத்துக்கு குறைவான பகுதியில் இருக்கும் என்று அதிகாரி கூறினார். எவரெஸ்ட் பகுதியில் மலையேறுவதை எளிதாக்குவதற்கும் கண்காணிப்பதற்கும் நேபாள அரசாங்கம் அமைத்த குழுவின் பரிந்துரைகளை பின்பற்றி இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

Previous articleஇலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்…14 பேர் உயிரிழப்பு
Next articleபிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் 37வது ஆண்டு விளையாட்டுப் போட்டி