சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறும் 5 காய்கறிகள்

0
300

ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பட்டியலில் சில காய்கறிகளை பச்சையாக எடுத்துக் கொள்வதை நாம் வழக்கமாக வைத்துக் கொள்கிறோம். காய்கறிகளை சமைக்கும்போது அதில் உள்ள உயிர்ச்சத்து குறைந்து விடுகிறது என்றும், பச்சையாக சாப்பிடுவதுதான் உடல் நலத்திற்கு நல்லது என்றும் பரவலான கருத்து கடந்த சில வருடங்களாக நிலவுகிறது. ஆனால், உண்மை நிலவரம் என்னவென்றால் காய்கறிகளை சமைத்த பிறகு ஊட்டச்சத்து மிகுந்ததாக மாறுகிறது என்று தெரிவிக்கப்படுகிறது. என்னென்ன காய்கறிகள் இதுபோல சமைக்கும்போது சத்து மிகுந்ததாக மாறும் என்பதை இந்தச் செய்தியில் தெரிந்து கொள்ளலாம்.

பாலக்கீரை : பாலக்கீரை என்பதை கிராமப்புறங்களில் பசலைக்கீரை என்றும் கூறுவார்கள். இதில் ஏராளமான மினரல்கள் மற்றும் விட்டமின் சத்துக்கள் உள்ளன. ஆனால், இதை நீங்கள் நன்றாக வேகவைக்காத பட்சத்தில் ஊட்டச்சத்துகள் போதுமான அளவுக்கு கிடைக்காது என்று கூறப்படுகிறது. சமைக்கும்போது இந்த கீரையில் இருந்து கால்சியம் சத்து வேறு வெளியேறுமாம். ஆவியில் வேக வைக்கும் கீரை சில வகை புற்றுநோயை தடுக்கும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அஸ்பாரகஸ் : காய்கறிகளில் தான் நம் செல்களுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளன என்பது நாம் அறிந்த கதைதான். அதுபோன்ற சத்து மிகுந்த தாவரங்களில் ஒன்றான அஸ்பாரகஸ் என்னும் தண்ணீர் விட்டான் கொடியை சமைக்கும்போது அதில் இருந்து விட்டமின் சி, ஏ, பி9 மற்றும் இ போன்ற சத்துக்கள் நம் உடலுக்கு கிடைக்கின்றன.

குடை மிளகாய் : நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதில் இந்த காய் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குடை மிளகாயை நீங்கள் ஆவியில் அல்லது தண்ணீரில் வேக வைப்பதைக் காட்டிலும், நன்றாக வதக்கி சாப்பிடுவது நல்லது. கொதிக்க வைக்கும்போது அதில் விட்டமின் சத்து தண்ணீரில் வெளியேற வாய்ப்பு உள்ளது.

பீன்ஸ் : அனைத்து தரப்பு மக்களும் விரும்பி சாப்பிடும் காய்கறி இது. நாம் அன்றாடும் சாப்பிடும் சாம்பார், பொறியல், கூட்டு முதல் ஃபிரைடு ரைஸ் வரை பல உணவுகளில் தவறாமல் இடம்பிடித்து விடும். இதை சமைக்கும்போது அதிக அளவு ஆண்டிஆக்ஸிடண்ட் சத்து கிடைக்கும். எண்ணெயில் பொறியல் செய்து சாபிட்டாலும் நல்லதுதான்.

பிரேஸிக்கா : பிரேஸிக்கா என்னும் தாவர குடும்பத்தில் உள்ள முட்டைக்கோஸ், காளிஃபிளவர், பிராக்காலி உள்பட அனைத்து காய்கறிகளுமே சமைக்கும் சமயத்தில் மிகுதியான ஊட்டச்சத்துகளை நமக்கு தரக் கூடியவை. குறிப்பாக, அல்சரை குணப்படுத்தும் ஆற்றல் முட்டைக்கோசு இலைகளில் உண்டு. சூப் செய்து சாப்பிட, காளிஃபிளவர் 65, மஞ்சூரியன் என பல வகைகளில் இவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இருப்பினும், நீராவியில் வேக வைத்து சாப்பிடுவது சிறப்பான பலன்களை தரும்.

Previous articleபொன்னியின் செல்வன் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டது
Next articleமாலத்தீவு அரசு உருவாக்கும் மிதக்கும் நகரம்