கனடாவில் காந்தி சிலை அவமரியாதை… ‘வெறுப்புச் செயலுக்கு’ இந்திய கண்டனம்

0
353

கனடாவில் உள்ள ஒன்டாரியோ மாகாணத்தில் ரிச்மண்ட் ஹில் எனும் நகரத்தில், விஷ்ணு கோவிலில் உள்ள காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கனடா நாட்டின் காவல்துறை “இது வெறுப்பு காரணமாக தூண்டப்பட்டுள்ள சம்பவம்.” என்று தெரிவித்துள்ளது. மேலும் சேதப்படுத்தப்பட்ட சிலையின் மீது ‘காளிஸ்தான்’ போன்ற வார்த்தைகளும், மேலும் சில அவதூறு வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், “காவல்துறை இது போன்ற வெறுப்பு குற்றங்களை எப்போதும் பொறுத்துக்கொள்ளாது எனவும், இனம், மொழி, நிறம், மதம், வயது, பாலினம், பாலின அடையாளம், பாலின வெளிப்பாடு போன்றவற்றின் அடிப்படையில் பிறரைப் பலிகடா ஆக்குபவர்கள் சட்டத்தின் கீழ் முழுமையாகத் தண்டிக்கப்படுவார்கள்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது போன்ற குற்றங்களின் சமூகம் தழுவிய தாக்கம் அதிகம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம், மேலும் வெறுப்புக் குற்றங்கள் மற்றும் வெறுப்புச் சார்பு சம்பவங்களின் அனைத்து நிகழ்வுகளையும் நாங்கள் தீவிரமாக விசாரிப்போம்” எனத் தெரிவித்தார்.

இதை பற்றி கருத்து கூறியுள்ள இந்திய தூதரகம், “இந்திய மக்களை வன்முறை பாதைக்கு இழுக்கும் இப்படியான வெறுப்பு செயல்களை நாங்கள் கண்டிக்கிறோம். இச்செயலால் கனடாவில் உள்ள இந்திய மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கனடா அரசிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். மேலும் குற்றவாளிகள் விரைவில் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்” என ட்விட் செய்துள்ளது.

Previous articleலண்டனில் பிரபல நடிகையுடன் டேட்டிங்.. லலித் மோடியின் வைரல் ட்வீட்
Next articleரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக நியமனம்.. இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது