ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக நியமனம்.. இலங்கையில் மீண்டும் போராட்டம் வெடித்தது

0
344

இலங்கை அதிபராக உள்ள கோத்தபய ராஜபக்சே தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பாக மாலதீவுக்கு தப்பி சென்றுள்ளார். இதனையடுத்து தற்காலிக அதிபருக்கான அதிகாரங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசம் சென்றுள்ளதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதனிடையே ரணில் விக்ரமசிங்கே தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு நகரில் மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது.

இலங்கையில் கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. உணவு, எரிபொருள் போன்ற் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதோடு அவற்றுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசாங்கம் மீது பொதுமக்கள் கோபம் திரும்பியுள்ளது.

கடந்த மே மாதம் இலங்கையில் போராட்டக்காரர்கள் நடத்திய போராட்டம் மற்றும் அதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக மகிந்த ராஜபக்ச தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ரணில் விக்ரமசிங்கே பிரதமராக பதவியேற்றார். எனினும், நாட்டின் பொருளாதாரம் மேம்படாததால் மீண்டும் போராட்டம் தொடங்கியுள்ளது. அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் கைப்பற்றியதையடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மாளிகையில் இருந்து வெளியேறினார்.

தனது பதவியை அவர் இன்று ராஜினாமா செய்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர் மாலத்தீவுக்கு தப்பி சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தற்காலிக அதிபருக்கான அதிகாரஙக்ள் சென்றுள்ளதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, தற்காலிக அதிபராக நியமித்துள்ளதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச தனக்கு அறிவித்துள்ளார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.எனினும் தற்காலிக அதிபராக ரணில் நியமிக்கப்பட்டுள்ளதை அந்நாட்டு மக்கள் ஏற்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக இலங்கையில் அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொழும்பு – பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரக்கணக்கானோர் குவிந்து பிரதமர் அலுவலக கதவை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை பிரயோகப்படுத்தப்பட்டது. இதேபோல் வானைநோக்கியும் துப்பாக்கியால் சுடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleகனடாவில் காந்தி சிலை அவமரியாதை… ‘வெறுப்புச் செயலுக்கு’ இந்திய கண்டனம்
Next articleகல்யாண ரிசப்ஷன் அலப்பறைகள்