இனி அலுவலகத்திலேயே குட்டி தூக்கம் போடலாம்… ஜப்பான் நிறுவனம் அசத்தல் கண்டுபிடிப்பு

0
340

அதிக வேலை மற்றும் நீண்ட தூர பயணம் காரணம் சோர்வு ஏற்படும் பணியாளர்கள் அலுவலகத்திலேயே உறங்கி புத்துணர்வு பெறுவதற்காக ஜப்பானைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ‘நேப் பாக்ஸ்’ என்ற புதிய கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அலுவலகத்தில் நீண்ட நேர வேலை காரணமாக, மதிய உணவிற்கு பிறகு லைட்டாக தூக்கம் வருவது போன்ற உணர்வை யாராலும் தவிர்க்க முடியாது. சிலர் கணினி முன்பு அமர்ந்து கொண்டோ அல்லது மேஜை மீது சரிந்த படியோ தூக்குவதை பார்க்க முடியும். கடினமாக நீண்ட நேரம் பணியாற்றிய பிறகு, குட்டி தூக்கம் போட்டால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் வருவது இயல்பான ஒன்று, இயற்கையாகவே இதனை யாராலும் தவிர்க்க முடியாது. அலுவலகத்தில் அதிக நேரம் பணியாற்றும் ஊழியர்களின் அவதியை போக்குவதற்காக ‘நேப் பாக்ஸ்’ (தூக்க பெட்டி) என்ற ஒன்றை இரு ஜப்பான் நிறுவனங்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.

ஹொகைடோ தீவுகளின் ப்ளைவுட் சப்ளையரான கோயோஜு கோஹன் நிறுவனமும், டோக்கியோ தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இடோகி என்ற ஃபர்னிச்சர் விற்பனை கடையும் கூட்டாக இணைந்து நேப் பாக்ஸை தயாரித்துள்ளனர். ஜப்பான் மக்கள் எறும்பை போல் சுறுசுறுப்பாக வேலை செய்யக்கூடியவர்கள், இதில் பெரும்பாலானோர் தங்களது வேலைக்குச் செல்வதற்காக நீண்ட நேர பயணத்தை செய்ய வேண்டியுள்ளது. இதனால் தான் ஜப்பானில் நகரங்களை விரைவாக இணைக்கும் விதமாக நவீனமயமாக்கப்பட்ட சாலைகள், புல்லட் ரயில்கள் போன்ற அதிநவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதன் விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

அப்படி அதிக நேரம் பயணம் செய்து அலுவலகத்திற்கு வரும் ஊழியர்கள், கடுமையான நீண்ட நேர வேலைக்குப் பிறகு கொஞ்சம் குட்டித்தூக்கம் போட எண்ணலாம். ஆனால் வேலை நேரத்தில் மேஜையில் சாய்ந்த படி தூங்குவது என்பது அசெளகரியமாக இருக்கும். இதற்காக தான் ஜப்பானைச் சேர்ந்த இந்த இரண்டு நிறுவனங்கள் ஒன்றிணைந்து நேப் பாக்ஸ் என்ற உபகரணத்தை கண்டுபிடித்துள்ளனர். இது செங்குத்தான ஒரு பாக்ஸ் போல வடிவமைக்கப்பட்டுள்ளது. நேப் பாக்ஸை பயன்படுத்துபவர் ஃபிளமிங்கோ பறவையைப் போல நிமிர்ந்த நிலையில் தூங்குவார்கள். இதனுள் ஊழியர்கள் கை, கால்கள், தலை, கழுத்து சவுகரியமாக வைத்துக்கொண்டு நின்றபடியே தூங்கலாம். இதில் உட்கார்ந்த படியே ஊழியர்கள் குட்டித் தூக்கம் போடவும் வாய்ப்புள்ளது.

இடோகியின் தகவல் தொடர்பு இயக்குனர் சாகோ கவாஷிமா கூறுகையில், “ஜப்பானில் நிறைய பேர் பாத்ரூமுக்குள் சென்று சிறிது நேரம் தாளிட்டுக்கொள்கிறார்கள். இது ஆரோக்கியமானது கிடையாது. வசதியான இடத்தில் சிறிது நேரம் தூங்குவது தான் புத்துணர்ச்சி பெற சிறந்தது” எனத் தெரிவித்துள்ளார். மேலும் பல ஜப்பானியர்கள் இடைவேளையின்றி தொடர்ந்து வேலை செய்கிறார்கள். நிறுவனங்கள் இதை ஓய்வெடுக்க மிகவும் நெகிழ்வான அணுகுமுறையாகப் பயன்படுத்தலாம் என நாங்கள் நம்புகிறோம் என்றும் கவாஷிமா தெரிவித்துள்ளார்.

இந்த நேப் பாக்ஸ் நீண்ட வேலை நேரத்தால் ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து ஊழியர்களை விடுவிப்பதற்காக பயன்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் ஊழியர்கள் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு பணியை மீண்டும் தொடங்கும் போது, உற்பத்தி திறன் அதிகரிப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. எனவே உலகிலேயே அதிக வேலை நேரத்தைக் கொண்ட ஜப்பான் நாட்டு மக்களுக்கு இந்த நேப் பாக்ஸ்கள் வரப்பிரசாதம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleசீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா; புதிதாக 1,012 பேருக்கு பாதிப்பு உறுதி
Next articleஒரே வருடத்தில் இந்தியாவை துறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 1 லட்சம் இந்தியர்கள்