தைவானிய நீரிணையில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை ஒட்டி உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன.
அமெரிக்காவும் சீனாவும் அமைதி காக்கவேண்டும் என்று தென்கொரியா வேண்டுகோள் விடுத்திருக்கிறது. பெலோசியின் தைவானியப் பயணத்தால் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்துத் தென்கொரியா கருத்துரைத்தது.
ஆசியப் பயணத்தின் ஒரு பகுதியாகத் திருமதி பெலோசி அடுத்து தென்கொரியாவுக்குப் பயணம் செய்கிறார். இன்று இரவு அவர் தென்கொரியத் தலைநகர் சோலுக்குச் சென்றுசேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தென்கொரிய அதிபர் அலுவலகம், அமெரிக்காவும் சீனாவும் பேசவேண்டும் என்று கேட்டுக்கொண்டது. வட்டாரத்தில் அமைதியும் நிலைத்தன்மையும் ஏற்பட பேச்சுதான் நல்லது என்று அதிபர் அலுவலகத்தின் அதிகாரி செய்தியாளர்களிடம் கூறினார்.
சீனாவின் ராணுவப் பயிற்சி குறித்து ஜப்பான் கவலை தெரிவித்தது. அது குறித்து ஜப்பான் தனது கவலையை பெய்ச்சிங்கிடம் தெரிவித்தது. தைவானுடன் எந்த அளவுக்குத் தொடர்பை வைத்திருப்பது என்பது அமெரிக்கா செய்யவேண்டிய முடிவு என்று ஆஸ்திரேலியா குறிப்பிட்டது.