123 நாட்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம்

0
316

இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிராக மக்களை கிளர்ந்தெழச் செய்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் அங்கொன்றும், இங்கொன்றுமாக போராட்டம் நடத்தி வந்த அவர்கள், கடந்த ஏப்ரல் 9-ந்தேதி தலைநகருக்கு தங்கள் களத்தை மாற்றினர். அதிபர் மாளிகைக்கு எதிரே உள்ள காலி முகத்திடலில் கூடாரங்களை அமைத்து போராட்டங்களை ஒருங்கிணைத்தனர். இந்த போராட்டத்தின் எழுச்சியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் அனைவரும் ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற நேர்ந்தது. அதன் பின்னரும் தங்கள் போராட்டத்தை மக்கள் நிறுத்தவில்லை. புதிதாக பதவியேற்றுள்ள அதிபர் ரணிலுக்கு எதிராகவும் தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். ஆனால் கோத்தபயவை தொடர்ந்து அதிபரான ரணில் விக்ரமசிங்கே, இந்த போராட்டக்காரர்களை ஒடுக்கும் பணியை மேற்கொண்டார். குறிப்பாக காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அமைத்திருந்த கூடாரங்களை அழித்தும், அதிபர் மாளிகை மற்றும் அரசு கட்டிடங்களில் புகுந்த போராட்டக்காரர்களை கைது செய்தும் அதிர்ச்சி அளித்தார்.

அதிபர் மாளிகையில் இருந்த போராட்டக்காரர்களை ராணுவ வீரர்கள் கடந்த 22-ந்தேதி வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். சர்வதேச அளவில் கண்டனங்களை பெற்றிருந்தது. இதன் தொடர்ச்சியாக காலி முகத்திடலில் குவிந்துள்ள போராட்டக்காரர்கள் ஆகஸ்டு 5-ந்தேதிக்குள் வெளியேற வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து போராட்டக்காரர்கள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.இந்தநிலையில் காலி முகத்திடல் போராட்டத்தை முறைப்படி முடித்துக்கொள்வதாக நேற்று போராட்டக்காரர்கள் அறிவித்தனர். அத்துடன் திடலில் இருந்து வெளியேறும் பணிகளையும் அவர்கள் தொடங்கினர். இதன் மூலம் இலங்கை அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் 123 நாட்களுக்குப்பின் முடிவுக்கு வந்துள்ளது. அதேநேரம் தங்களின் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் அறிவித்து உள்ளனர்.

இது தொடர்பாக போராட்டக்குழுவின் செய்தி தொடர்பாளர் மனோஜ் நாணயக்கார செய்தியாளர்களிடம் கூறியதாவது:- காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவது என்று நாங்கள் ஒருமனதாக முடிவு செய்துள்ளோம். இதனால் எங்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததாக அர்த்தம் அல்ல. நாட்டின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரவேண்டும், புதிதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்த வேண்டும், அதிபர் ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். காலி முகத்திடலில் போராட்டத்தை நாங்கள் முடித்துக்கொண்டாலும், இலங்கையில் அமைப்பு ரீதியான மாற்றத்துக்கான எங்கள் போராட்டம் தொடரும் என்று மனோஜ் நாணயக்கார தெரிவித்தார். காலி முகத்திடலில் போராட்டத்தை முடித்துக் கொண்டதை தொடர்ந்து கோர்ட்டில் தொடர்ந்திருந்த வழக்கை போராட்டக்காரர்கள் திரும்ப பெற்றனர்.

Previous articleமகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே வெளிநாடு செல்ல தடை நீட்டிப்பு
Next articleநிதி மோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் விசாரணை