நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின், விக்டோரியா நகரில் நடைபெற்ற ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு, சுமார் 15 செ.மீ. அளவு கொண்ட மல்லிகைப்பூவை நவ்யா நாயர் எடுத்துச் சென்றுள்ளார்.
இந்த நிலையில், மெல்பேர்ண் சர்வதேச விமான நிலையத்தில், நடிகை நவ்யா நாயரின் உடைமைகளைச் சோதனை செய்த விமான நிலைய அதிகாரிகள் அதில் மல்லிகைப்பூ இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து, அவருக்கு விமான நிலையத்திலே 125,000 ரூபாய் (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டது.
தனது தந்தை தனக்கு மல்லிகைப்பூ வாங்கித் தந்ததாகவும், அதை இரண்டாகப் பிரித்து ஒரு பாதியை கொச்சியிலிருந்து சிங்கப்பூர் வரை தனது தலையில் வைத்திருந்ததாகவும், மீதிப் பாதியைத் தனது கைப் பையில் வைத்திருந்ததாகவும் நவ்யா நாயர் கூறினார்.
ஆஸ்திரேலியாவில் மிகவும் கடுமையான உயிரியல் பாதுகாப்பு (Biosecurity) சட்டங்கள் உள்ளன.
அவற்றின்படி, மல்லிகைப்பூ அல்லது வேறு எந்தப் புதிய தாவரப் பொருட்களையும் விமானத்தில் கொண்டு செல்வதற்கு பொதுவாக அனுமதி இல்லை.
வெளிநாடுகளிலிருந்து வரும் பூக்கள் அல்லது தாவரங்களில், ஆஸ்திரேலியாவில் இல்லாத பூச்சிகள், நோய்க்கிருமிகள் அல்லது களை விதைகள் போன்றவை இருக்கலாம் என்று ஆஸ்திரேலியா அரசாங்கம் கருதுவதாக செய்தி வெளியிட்டுள்ளது.





