கோவிட் காலத்தில் பல அமைச்சுக்கள் இரகசியமாகப் பதவியேற்றது தொடர்பான முன்னாள் பிரதமர் ஸ்கொட் மொரிசன் மீதான விசாரணையின் இறுதி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான நடவடிக்கையால் அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான விசாரணையில் தெரியவந்துள்ளது.
அமைச்சுப் பதவிகளில் மாற்றம் ஏற்படும் போதெல்லாம் அது தொடர்பில் மக்களுக்குத் தெரிவிப்பதற்கு உரிய முறைமை ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்றைக் கட்டுப்படுத்த கூடுதல் அதிகாரங்களை தாம் பெற்றுள்ளதாக முன்னாள் பிரதமர் தெரிவித்திருந்த கருத்தையும் விசாரணைக் குழு நிராகரித்துள்ளது.
இதேவேளை, பிரதமர் அந்தோனி அல்பானீஸ் இன்று காலை விசேட செய்தியாளர் மாநாட்டை கூட்டி இது தொடர்பான தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ஆஸ்திரேலிய மக்களை தவறாக வழிநடத்தியுள்ளார் என்பது தெளிவாகின்றது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த விசாரணைக்கு ஸ்காட் மொரிசன் ஒத்துழைக்கவில்லை என்று பிரதம மந்திரி அல்பானீஸ் கடுமையாக குற்றம் சாட்டினார்.
விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அமைச்சரவைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகும் முடிவை ஸ்கொட் மொரிசன் எடுக்க வேண்டும் என்றும் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.