மாப்பிள்ளை வேண்டாம்…தன்னை தானே திருமணம் செய்வதாக அறிவித்த இளம்பெண்

0
372

குஜராத்தை சேர்ந்த ஷாமா பிந்து என்னும் இளம்பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவித்திருக்கிறார். குஜராத்தின் வதோதரா பகுதியில் வரும் 11 ஆம் தேதி இந்து மத சடங்குகளுடன் இவரது திருமணம் நடைபெற இருக்கிறது. இதுகுறித்துப் பேசிய 24 வயதான பிந்து,”நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன். அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். மக்கள் விரும்பிய ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார்கள். நான் என்னை நேசிக்கிறேன், அதனால் இந்த திருமணத்தை நான் விரும்புகிறேன்” என்றார்

தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் பிந்து, தன்னுடைய திருமணம் இந்து மத மரபுகளின்படி நடைபெற இருப்பதாக அறிவித்திருக்கிறார். சிலர் சுய திருமணங்களை பொருத்தமற்றதாகக் கருதுவதாக கூறும் பிந்து,”உண்மையில் இதன்மூலம் பெண்களின் தனிப்பட்ட முடிவுகள் முக்கியம் என்பதை உணர்த்த முயல்கிறேன்” என்றார். தனது பெற்றோர் குறித்து பேசிய பிந்து,” எனது தாய் மற்றும் தந்தை திறந்த மனமுடையவர்கள். ஆகவே என்னுடைய முடிவை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். அவர்களது பரிபூரண சம்மதத்துடனே எனது திருமணம் நடைபெற இருக்கிறது” என்றார்.

வதோதராவில் உள்ள கோத்ரி கோவிலில் வழக்கமான திருமணம் போலவே தனது திருமணமும் நடைபெற இருப்பதாக கூறும் பிந்து, திருமணம் முடிந்தவுடன் கோவாவிற்கு ஒருவார காலம் ஹனிமூன் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், தனது திருமணம் குறித்து பேசிய பிந்து,” இந்தியாவில் இதற்கு முன்னர் யாராவது இதுபோல சுய திருமணம் செய்துகொண்டார்களா? என இணையத்தில் தேடினேன். அப்படி ஒரு சம்பவம் நடந்ததாக தெரியவில்லை. ஆகவே இந்தியாவில் முதல் சுய திருமணம் என்னுடையதாகத்தான் இருக்கும்” என்றார் மகிழ்ச்சியாக.

Previous articleதிருமணம் செய்ய மணமகனுக்கு 10 கட்டளைகளை பட்டியலிட்ட இளம்பெண்
Next articleஇந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…5 மாநிலங்களுக்கு அரசு புதிய உத்தரவு