ஐக்கிய நாட்டுப் பாதுகாப்பு மன்றச் சந்திப்பின்போது, ரஷ்யத் தூதுவர்வசிலி நெபென்ஸியா (Vassily Nebenzia) வெளிநடப்புச் செய்திருக்கிறார்.
ரஷ்யா, உக்ரேன்மீது படையெடுத்ததால் உலக அளவில் உணவு நெருக்கடி உருவாகியிருப்பதாக, ஐரோப்பிய ஒன்றியம் குற்றஞ்சாட்டியிருந்தது.
ஒன்றியத் தலைவர் சார்ல்ஸ் மிஷெல் (Charles Michel), திரு. நெபென்ஸியாவை நேரடியாகச் சாடியதைத் தொடர்ந்து அந்தச் சம்பவம் நேர்ந்தது.
மக்களை ஏழ்மைக்கு இட்டுச்செல்வதற்கு ரஷ்யாவே முழுப் பொறுப்பு என்று அவர் குறைகூறினார். வளர்ந்துவரும் நாடுகளுக்கு எதிராக ரஷ்ய அரசாங்கம் உணவு விநியோகத்தைப் பகடைக் காயைப் போல் பயன்படுத்துவதாகத் திரு. மிஷெல் குறிப்பிட்டார்.
தானியக் கிடங்குகளைக் குறிவைத்து, உக்ரேனிடமிருந்து தானியங்களைத் திருடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
ரஷ்யா மற்றவர்கள் மீது பழி சுமத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறையைவிட்டு வெளியேறலாம் என்றும் உண்மையைக் கேட்பது எளிதாக இருக்காது என்றும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர், ரஷ்யத் தூதரிடம் நேரடியாக தெரிவித்துள்ளார்.