நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண வைபவங்கள் துவங்கின

0
161

நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் நாளை காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்கப் போகும் பிரபலங்களின் பட்டியலும் வெளியாகியுள்ளது. திருமண வைபவங்கள் மெஹந்தி சங்கீத் நிகழ்ச்சியுடன் ஜுன் 8 ம் தேதி காலை துவங்கி உள்ளன.

6 ஆண்டு காதலுக்குப் பின்னர் நயன்தாரா விக்னேஷ் சிவனை நாளை கரம் பிடிக்கிறார். இந்த திருமணம் நாளை மகாபலிபுரத்தில் உள்ள ஷெரட்டன் கிராண்டு ஓட்டலில் விமர்சையாக நடைபெறவுள்ளது. இந்த விழாவுக்கு குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. முதலில் தங்களது திருமணத்தை திருப்பதியில் நடத்த முடிவு செய்திருந்ததாகவும், பயண தூரம் காரணமாக திருமணம் மகாபலிபுரத்திற்கு மாற்றப்பட்டதாகவும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

திருமணம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த விக்னேஷ் சிவன், ‘என்னுடைய சினிமா வாழ்க்கைக்கு ரசிகர்கள் எந்த அளவுக்கு ஆசிர்வாதத்தை அளித்தார்களோ, அதே போன்று எனது குடும்ப வாழ்க்கைக்கும் அவர்கள் ஆசிர்வதிக்க வேண்டும். நான் எனது வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறேன். நயன்தாராவை ஜூன் 9ம்தேதி திருமணம் செய்து கொள்கிறேன். எனது குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும்.

முதலில் எங்கள் திருமணத்தை திருப்பதியில் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் பயண தூரம் காரணமாக மகாபலிபுரத்திற்கு நிகழ்ச்சி மாற்றப்பட்டுள்ளது. திருமணம் தொடர்பான புகைப்படங்களை நாளை மதியம் உங்களுடன் பகிர்கிறோம். 11ம் தேதி மீடியா நண்பர்களை சந்தித்து அவர்களுடன் மதிய உணவை பகிர்ந்து கொள்கிறோம்’ என்று தெரிவித்தார்.

நயன்தாராவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி, கமல், சிரஞ்சீவி, சூரியா, அஜித், கார்த்தி, விஜய் சேதுபதி, சமந்தா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நட்சத்திர ஜோடியின் திருமணம் பிரபல இயக்குனர் கவுதம் மேனனால் முழுவதுமாக இயக்கம் செய்யப்படும் என்றும், இந்த நிகழ்ச்சி ஓடிடி நிறுவனத்திடம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திருமணத்திற்கு சில நாட்களுக்கு பின்னர், ஓடிடி தளத்தில் நயன்தாராவின் திருமண நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது.