இந்தியாவில் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களுக்கு தடை

0
203

ஆன்லைன் பெட்டிங் பந்தயம் மற்றும் சூதாட்டம் ஆகியவற்றின் விளம்பரங்களை இந்திய ஊடகங்கள் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் அதிகரித்து வரும் சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்டம் காரணமாக பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். பல்வேறு தரப்பிலும் சமூக சிக்கல்கள், நிதி பிரச்னைகள் உள்ளிட்டவற்றிற்குக் காரணமாக விளங்கும் இந்த சூதாட்டம் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளை பெருமளவில் பாதிக்கின்றது.

மேலும், இதன் விளம்பரங்கள் வாடிக்கையாளர்களை ஏமாற்றி அவர்களை இதன் வலையில் வீழ்த்தும் விதமாக உள்ளது. எனவே, சூதாட்டத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை செய்தி நாளேடுகள், தொலைக்காட்சிகள், டிஜிட்டல் ஊடகங்கள் என அனைத்து ஊடகங்களும் தவிர்க்க வேண்டும். இதை அனைவரும் பின்பற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

அண்மை காலமாகவே நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்கள் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. தனி நபர்கள், குடும்பஸ்தர்கள் என பலரும் ஆன்லைன் விளையாட்டுக்களில் பணத்தை தொலைத்து கடன் நெருக்கடியில் சிக்கி உயிர்களை மாய்த்துக் கொள்வது தொடர்கதையாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மிக்கு எதிரான குரல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இதற்கு எதிராக தடை சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் இந்த தடை சட்டம் வலுவானதாக இல்லை எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு மீண்டும் அனுமதி அளித்தது.

கடந்த சில வாரங்களாக ஆன்லைன் சூதாட்டப் பிரச்னை காரணமாக தற்கொலைகள் மீண்டும் அதிகரித்துள்ளதால், தமிழ்நாடு அரசு இதற்கு தடை விதிக்க ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் சிறப்பு குழு ஒன்றை தற்போது அமைத்துள்ளது. எனவே, விரைவில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை வர வாய்ப்புள்ளது.

Previous articleஇலங்கையிலிருந்து படகு வழியாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 38 பேர் கைது
Next articleஅமேசான் நிறுவனத்துக்கு 200 கோடி ரூபாய் அபராதம்