இந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை

0
168

இந்திய பாதுகாப்புத் துறையில் அக்னி வீர் என்ற புதிய வேலைவாய்ப்பு துறையை உருவாக்கி உள்ளது மத்திய அரசு. அக்னி பாத் என்ற இந்த திட்டத்தின் மூலம் ராணுவத்தின் மூன்று படை பிரிவுகளிலும் 4 வருட ஒப்பந்தத்தில் “அக்னி வீர் ” எனப்படும் வீரர்கள் பணிக்கு அமர்த்தப்பட உள்ளனர்.

முப்படை தளபதிகள் மூலம் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. பிரதமர் மோடியிடம் இந்த திட்டம் குறித்து முப்படை தளபதிகள் கடந்த வாரம் விளக்கிய நிலையில் இன்று இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்னி பாத் திட்டம் மூலம் பணிக்கு அமர்த்தப்படும் வீரர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் 4 வருடம் மட்டுமே பணியில் இருப்பார்கள். இவர்களுக்கு 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும். அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவ துறையில் உருவாக்கிய குறுகிய கால ஆட்சேர்ப்புகளுக்கு எதிரான வன்முறை போராட்டங்கள் மூன்றாவது நாளாக தீவிரமடைந்து வருகிறது.

அரசாங்கம் இத்திட்டத்தின் கீழ் இரண்டு வருட வயது தளர்வை அளிப்பதாக செய்தி வெளியிட்டிருந்தனர். அதையும் எதிர்த்து நேற்று மாலை போராட்டம் நடைபெற்றது. அவர்களைத் தடுக்கும் பணியில் காவல் துறை ஈடுபட்டு வருகிறது. போராட்டத்தில் சுமார் 180 பேர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் போராட்டக்காரர்கள் இன்று காலையிலேயே பீகாரின் சமஸ்திபூர் நகரில் சாலைப் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தி போராடி வருகின்றனர். பக்சர் மற்றும் பாட்னா-ஹவுரா-கயா-பகல்பூர் பிரிவில் பாட்னா-புது தில்லி பிரதான ரயில் பாதையைத் தடுத்து மறியல் செய்தனர்.

விக்ரம்சிலா விரைவு ரயிலின் குளிரூட்டப்பட்ட மூன்று பெட்டிகள் சூறையாடப்பட்டு, ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, தீவைக்கப்பட்டது. தீயை கட்டுப்படுத்த முடியாமல் போராட்டக்காரர்களை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். தீயை கட்டுப்படுத்துவதற்குள் அந்த மூன்று பெட்டிகளும் பெரும்பாலும் எரிந்து நாசமாகியுள்ளது. அர்வால், ககாரியா, போஜ்பூர் மற்றும் லக்கிசராய் மாவட்டங்களிலும் போராட்டங்கள் பதிவாகியுள்ளன. மேலும் தும்ரான் ரயில் நிலையத்தில் வாகன டயர்கள் எரிக்கப்பட்டு போராட்டம் செய்துள்ளனர். இது மட்டுமின்றி அண்டை மாநிலமான உத்திரபிரதேசம், தலைநகர் டெல்லியிலும் இன்று காலை முதல் கலவரங்களும் போராட்டங்களும் மறியல்களும் நடந்து வருகிறது.

இந்தியா முழுவதும் நடந்த கலவரத்தில் இதுவரை 12 ரயில்கள் எரிக்கப்பட்டுள்ளன. தெலுங்கானா மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Previous articleஆஸ்திரேலிய தமிழர்களுக்கும் பல்லின குழுவினருக்கும் மகிழ்ச்சியளிக்கும் ஒரு செய்தி
Next articleஇலங்கையின் தாமதமான முடிவு தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்