இலங்கையின் தாமதமான முடிவு தான் பொருளாதார நெருக்கடிக்கு காரணம்

0
257

இலங்கை முன்கூட்டியே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியிருந்தால், தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடியை தடுத்திருக்கலாம் என, அந்நாட்டின் மத்திய வங்கி ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்கே தெரிவித்துள்ளார். வெளியிலிருந்து உதவி கேட்க தாமதம் செய்தது தவறு என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உட்பட சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டாலர்கள் உதவி இந்த ஆண்டு இலங்கைக்குத் தேவை. மேலும், கடந்த மாதம் வரலாற்றில் முதல் முறையாக தான் கட்ட வேண்டிய வெளிநாட்டுக் கடனை இலங்கை கட்டத் தவறியது. “சர்வதேச நாணய நிதியத்திடம் செல்லும் முடிவை முன்கூட்டியே எடுத்திருந்தால், கடனை திருப்பி செலுத்துவதற்கான நடைமுறைகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கியிருந்தால், நாட்டில் இத்தகைய துன்பங்கள் நேராமல் இந்த சூழ்நிலையை சமாளித்திருக்கலாம்” என நந்தலால் வீரசிங்கே தெரிவித்தார்.

கடும் எரிபொருள் பற்றாக்குறை, உணவுப்பொருட்களின் விலை உயர்வு, மருந்துகள் பற்றாக்குறை உள்ளிட்டவற்றை சந்தித்து வரும் இலங்கையின் பொருளாதாரத்தை சீர்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய கருத்துகளை தெரிவித்துள்ளார். ஐநா உலக உணவு திட்டத்தின் சமீபத்திய கணக்கெடுப்பின்படி, மூன்றில் இரண்டு பங்கு இலங்கை குடும்பங்கள், எடுத்துக்கொள்ளும் உணவின் அளவை குறைத்துக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

பிரிட்டனிடமிருந்து 1948ஆம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை காணாத மோசமான பொருளாதார நெருக்கடியை இலங்கை சந்தித்து வருவதாக வீரசிங்கே தெரிவித்தார். வரும் திங்கள்கிழமை (ஜூன் 20) சர்வதேச நாணய நிதியத்தின் குழுவினர், இலங்கைக்கு செல்லவுள்ளனர். அவர்களுடன் நடைபெறும் சந்திப்புகளில் முக்கிய பங்கேற்பாளராக வீரசிங்கே இடம்பெற உள்ளார். ஆனால், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக இருந்த அஜித் நிவார்ட் கேப்ரால் ராஜினாமா செய்த நிலையில், அப்பதவியில் நியமிக்கப்பட்ட வீரசிங்கே, முழு பதவிக்காலமான ஆறு ஆண்டுகளுக்கு இம்மாத இறுதியில் நியமிக்கப்படுவாரா என்பதில் உறுதியற்ற சூழல் நிலவுகிறது.

“இப்பதவியில் தொடர்வதற்கான எனது விருப்பத்தை நான் வெளிப்படுத்தியுள்ளேன்,” என்றார் வீரசிங்கே. “நான் இப்பதவியை ஏற்றுக்கொண்டபோது, இரு மாதங்கள் மட்டுமே பணியாற்றிவிட்டு திரும்பிச் சென்றுவிடுவேன் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்ததாக நான் நினைக்கவில்லை. அதுதான் நிலைமை எனில், நான் வந்திருக்க மாட்டேன். இந்த சூழல் என்பது இரு மாதங்களில் சரிசெய்யப்படக்கூடிய ஒன்று அல்ல. நிலைமை சரியாவதற்கு முன் முதலில் நிலைமை மோசமாகும்” என அவர் தெரிவித்தார்.

Previous articleஇந்தியாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் வன்முறை
Next articleஇலங்கையில் பரவும் இன்ஃப்ளூயன்சா ஏ வைரஸ்…14 பேர் உயிரிழப்பு