‘மின் பற்றாக்குறையால் மொபைல்போன், இணையதள சேவை துண்டிக்கப்படலாம்’ – பாகிஸ்தான் அரசு எச்சரிக்கை

0
199

பாகிஸ்தானில் அந்நியச் செலாவணி கையிருப்பு குறைந்து வருவதால் நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், அந்நாடு கடுமையான மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சேமிக்கவும், மின் பயன்பாட்டை குறைக்கவும் பாகிஸ்தானில் பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பாகிஸ்தானின் பல பகுதிகள் நீண்ட நேர மின்வெட்டு பிரச்சனையை சந்தித்து வருகிறது. கிராமப்புறங்களில் நாள்தோறும் 18 மணிநேரம் வரையிலும்கூட மின்தடை நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, மின் பற்றாக்குறையைப் போக்க நாட்டின் பல்வேறு இடங்களில் அரசு ஊழியர்களின் பணிபுரியும் நேரத்தைக் குறைத்துள்ளது. தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்களை வழக்கமான நேரத்தை விட முன்னரே மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு மத்தியில் தொடர் மின்வெட்டு காரணமாக ஆத்திரமடைந்துள்ள பொதுமக்கள், வியாபாரிகள் அவ்வப்போது சாலை மறியல் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜூலை மாதத்தில் நாடு கடுமையான மின்வெட்டை எதிர்கொள்ளும் என பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஷ் ஷெரீஃப் அறிவித்ததைத் தொடர்ந்து நிலைமை அங்கு மேலும் மோசமடைந்துள்ளது. மேலும் பாகிஸ்தானில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களும் மின்வெட்டு பிரச்சினையை எதிர்கொண்டு வருவதால் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவைகள் துண்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாகிஸ்தான் தேசிய தகவல் தொழில்நுட்ப வாரியம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் பணவீக்கம் ஜூலையில் இரண்டு இலக்கத்துக்கு வந்தடைந்திருப்பதால் இன்னும் 6 ஆண்டுகளில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

Previous article110 நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அலட்சியம் வேண்டாம் WHO எச்சரிக்கை
Next articleAnnual music concert