110 நாடுகளில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா – அலட்சியம் வேண்டாம் WHO எச்சரிக்கை

0
175

ஓமைக்ரான் தொற்று வகைகளின் வேகமான பரவல் காரணமாக 110 நாடுகளில் கோவிட்-19 தொற்று மீண்டும் அதிகரித்து காணப்படுவதாக உலக சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. கோவிட்-19 பெருந்தொற்று பாதிப்பு மாறிக்கொண்டே இருந்தாலும் இன்னும் ஓயவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதோனாம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்வதேச அளவில் நிலவும் தற்போதைய கோவிட் பரவல் குறித்து அவர் கூறுகையில், இந்த பெருந்தொற்றை எதிர்கொள்வதில் நாம் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளோம். வைரஸை கண்டறிவதில் நாம் சிறப்பான திறன் கொண்டுள்ள நிலையில், புதிதாக உருமாறும் தொற்றுகளை விரைவாக ஆய்வு செய்வது சற்றே கடினமாக உள்ளது. எனவே, பெருந்தொற்று ஓய்ந்து விட்டது என நாம் இருந்துவிடக்கூடாது.
BA.4 மற்றும் BA.5 வகை கோவிட் தொற்றுகளால், சுமார் 110 நாடுகளில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக உலகளவில் தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 20 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல் உயிரிழப்புகளும் மொத்தம் உள்ள ஆறு கண்டங்களில் மூன்று கண்டங்களில் அதிகரித்து வருகிறது. பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் வேகம் மிகக் குறைவாக உள்ளது.

இந்த காலத்தில் அனைத்து நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் சுமார் 70 சதவீத பேருக்காவது தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கடந்த 18 மாதங்களில் சுமார் 120 கோடி தடுப்பூசிகள் உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக உலகின் 75 சதவீத சுகாதார பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திவிட்டனர்.

2 கோடி உயிர்கள் தடுப்பூசி காரணமாக காக்கப்பட்டுள்ளதாக லென்செட் நிறுவன ஆய்வு தெரிவிக்கிறது. அதேவேளை,பலகோடி பேர் இன்னும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் அபாய நிலையில் உள்ளனர்.70 சதவீத இலக்கை 58 நாடுகள் எட்டியுள்ள நிலையில், குறைந்த வருவாய் கொண்ட நாடுகள் சராசரியாக 13 சதவீத தடுப்பூசியே செலுத்தியுள்ளது என்று கவலை தெரிவித்துள்ளார்.