
2022-ம் ஆண்டின் முதல் பாதியில் உலகளவில் வெளியான படங்களின் பட்டியலில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி 2-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் மறைந்த நல்லாண்டி டைட்டில் ரோலில் நடித்து விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘கடைசி விவசாயி’ திரைப்படம், இந்த ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி வெளியானபோது வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. ஆனால், உலகிலேயே சிறந்த இரண்டாவது இடத்தைப் பிடித்த படம் என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
உலகெங்கிலும் உள்ள திரைப்படங்களை மதிப்பிடும் புகழ்பெற்ற லெட்டர்பாக்ஸ் இணையதளம் 2022 ஆம் ஆண்டிற்கான முதல் பாதி அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட் எழுதி இயக்கிய, மிச்செல் யோஹ் நடித்த ‘எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்’ என்ற அமெரிக்க நகைச்சுவை திரைப்படம் முதலிடம் பிடித்துள்ளது.
அந்தப் பட்டியலில் ‘கடைசி விவசாயி’ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. “நிலத்துடனான விவசாயியின் உறவைப் பற்றிய ஒரு மென்மையான, விவசாய படம் இது. இதில் நிஜ விவசாயி நல்லாண்டி முன்னணி கதாபாத்திரத்தில் விவசாயியாக நடித்தார். இதுவே அவர் நடித்த முதல் மற்றும் கடைசிப்படம்.
‘கடைசி விவசாயி’ படத்தை நடிகர் விஜய் சேதுபதி தயாரித்தார். அதோடு சிறிய பாத்திரத்தில் நாடோடியாக நடித்தார். அதே நேரத்தில் யோகி பாபுவும் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் – விஜய் சேதுபதி நடித்த ‘விக்ரம்’ திரைப்படம் உலகளவில் 11வது சிறந்த படமாக மதிப்பிடப்பட்டுள்ளது.