பாடி பில்டர்களுக்கு அதிர்ச்சி அளித்த தாலிபான் அரசின் புதிய உத்தரவு

0
215

ஆப்கானிஸ்தானில் பாடி பில்டர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடு வீரர்களையும், பயிற்சியாளர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நாளொரு நடைமுறையும், பொழுதொரு விதிமுறையுமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பந்தாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் பாடிபில்டர்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அந்த துறையையே தடதடக்க வைத்துள்ளது. பொதுவாக ஆப்கானியர்கள் உடற்கட்டமைப்பில் அதிக அக்கறை செலுத்துபவர்களாக இருக்கின்றனர்.

இதனால் நகரங்களில் ஏராளமான உடற்பயிற்சிக் கூடங்கள் இயங்கி வருகின்றன. இத்தகைய உடற்பயிற்சிக் கூடங்களில் இதுநாள் வரை 200 பேர் வரை பயிற்சி பெற்று வந்த நிலையில், புதிய கட்டுப்பாட்டால் 20 முதல் 30 பேர் வரை மட்டுமே வருவதாக கவலையுடன் கூறுகின்றனர் உடற்பயிற்சிக் கூட உரிமையாளர்கள். அப்படி என்னதான் கட்டுப்பாடு விதித்தார்கள் என்று கேட்டால், இனி பாடி பில்டர்கள் முழங்கால் வரை மறைக்கும் வகையிலான ஆடை அணிய வேண்டும் என்பதே அந்த புதிய உத்தரவு என்கின்றனர்.

ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது முதல் அடுக்கடுக்காக பெண்களுக்கு தடை விதித்த தாலிபான்கள் தற்போது ஆண்கள் பக்கமும் கவனத்தை திருப்பியுள்ளனர். தொடை தெரியும் படி உடை அணிவது தங்கள் நெறிமுறைகளுக்கு முரணானது என்று கூறும் அதிகாரிகள், இடுப்பு முதல் முழங்கால் வரை மறைக்கும் வகையில் உடையணிந்தே ஆணழகன் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என ஆணையிட்டுள்ளனர். இப்படி ஒரு கட்டுப்பாடா என இதனைக் கேட்டு அதிர்ந்து போயிருக்கின்றனர் பாடி பில்டர்கள்.

ஏனென்றால் உடற்கட்டமைப்பு மற்றும் உடற்தகுதிக்கான சர்வதேச சம்மேளனத்தின் படி, சுத்தமான, ஒளிபுகாத டிரங்கு வகை ஆடையையே போட்டியாளர்கள் அணிய வேண்டும். அப்போது தான் gluteus maximus எனப்படும் புட்டப் பெருந்தசையின் அளவை வைத்து நடுவர்கள் வெற்றியாளர்களை தேர்வு செய்ய முடியும். அதையே மறைத்து வைத்து விட்டு என்ன போட்டி நடத்துவது என புலம்பிக் கொண்டிருக்கின்றனர் ஆப்கானிய வீரர்கள். இதற்கும் ஒருபடி மேலே சென்று போஸ்டர்களில் உள்ள பாடி பில்டர்களின் புகைப்படங்களில் இடுப்புக்கு கீழ் இருக்கும் பகுதியை பெயிண்ட் அடித்து மறைத்து, தங்களது விதிமுறையை கடுமையாக அமல்படுத்தி இருக்கின்றனர் தாலிபான்கள்.

Previous articleஇந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள புதிய ஒமைக்ரான் சப்-வேரியன்ட் ஆபத்தானதாக இருக்கலாம்
Next articleஉலகின் சிறந்தப் படங்கள் பட்டியலில் 2-ம் இடம் பிடித்த விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி