மியான்மரில் 2 தமிழர்கள் சுட்டுக்கொலை.. நண்பர்களை பார்க்க சென்றபோது துயரம்

0
184

மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் கூடிய மோரே பகுதியில், மோகன் மற்றும் அய்யனார் ஆகியோர் வசித்து வந்தனர். இந்நிலையில், அண்டை நாடான மியான்மரின் தாமு எனும் பகுதியை சேர்ந்த, தங்களது நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக இருவரும், உரிய அனுமதியின்றி நாட்டின் எல்லையை தாண்டி சென்றுள்ளனர்.

அப்போது மியான்மரின் ஆயுதப்படைக் குழுவால் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. விசாரணையில் உயிரிழந்தவர்களில் ஒருவர் 28 வயதான மோகன் என்பதும், ஆட்டோ ஓட்டுநரான அவருக்கு கடந்த 9ம் தேதி தான் திருமணம் நடைபெற்றது எனவும் தெரிய வந்துள்ளது. மற்றொரு நபர் 35 வயதான அய்யனார் எனும் சிறு வியாபாரி என அறியப்பட்டுள்ளது.

எதிர்பாராத விதமாக இருவரும் மியான்மர் எல்லைக்குள் நுழைந்ததால், அவர்களை உளவாளிகள் என கருதி அந்நாட்டு ராணுவத்தினர் சுட்டுக் கொன்று இருக்கலாம் என மோரே தமிழ் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மணிப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து , விசாரணை மேற்கொண்டுள்ளனர். மியான்மரில் உள்ள இரண்டு தமிழர்களின் உடல்களை, இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன.