குரங்கு அம்மை பாதிப்பு தொடர்ந்து அதிகரிப்பு…உலக சுகாதார அமைப்பு அவசர ஆலோசனை கூட்டம்

0
198

கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு மத்தியில் குரங்கு அம்மையும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் ஐரோப்பா, ஆப்பிரிக்காவில் அதிகளவில் பரவி உள்ளது. தற்போது கடந்த திங்கட்கிழமையுடன் முடிந்த வாரத்தில் 59 நாடுகளில் 6,027 பேருக்கு குரங்கு அம்மை பரிசோதனைக்கூட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. குரங்கு அம்மை நோய்ப் பரவலில் அதிக உயிரிழப்புகள் இல்லை என்றாலும் சர்வதேச பாதுகாப்புக்காக பொது சுகாதார அவசர நிலை பிறப்பிக்கலாமா என்பது குறித்து கடந்த 27-ம் தேதி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை நடத்தியது. அதில், ஐரோப்பாவில் அதிக அளவில் குரங்கு அம்மை பரவி வருவது கவலை அளித்தாலும் பெருந்தொற்றாக அறிவிக்க வேண்டிய உடனடி அவசரத் தேவை எழவில்லை என முடிவு செய்யப்பட்டது.

கடந்த மாதம் 27-ந் தேதியுடன் ஒப்பிடுகையில் குரங்கு அம்மை பாதிப்பு 77 சதவீதம் அதிகரித்து இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே சுமார் 50 நாடுகளில் இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குரங்கம்மை பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது. இதுபற்றி உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கூறுகையில், “கடந்த இரண்டு வாரங்களில் உலகளவில் பதிவான குரங்கு அம்மை வழக்குகள் கிட்டத்தட்ட 30 சதவீதம் அதிகரித்துள்ளது கவலை தருகிறது. அதனால் அடுத்த கட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் அவசியம் என்றும் வரும் 18 அல்லது அதற்கு முன்பாகவே கூட்டம் நடத்தப்பட்டு அவசர நிலை பிறப்பிப்பது குறித்து அறிவிக்கப்படும்” என தெரிவித்தார்.

Previous articleவரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்… இலங்கையில் கோர தாண்டவம்
Next articleகொழும்பில் ஊரடங்கு உத்தரவு அமுல்