மீண்டும் 19,000 நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு

0
132

இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து காணப்படும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின் படி, நாட்டின் தினசரி கோவிட் பாதிப்பு எண்ணிக்கை 18,840 ஆக பதிவாகியுள்ளது.

இதன் மூலம் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 36 லட்சத்து 4 ஆயிரத்து 394ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் கோவிட் பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 28ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,693ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 43 உயிரிழப்புகள் பதிவான நிலையில், நாட்டின் மொத்த உயிரிழப்பு 5,25,386ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் பாதிப்பு விகிதத்தை குறிக்கும் தினசரி டெஸ்ட் பாசிடிவிட்டி விகிதம் நேற்று 4.14 சதவீதமாக உள்ளது. நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 54 ஆயிரத்து 778 பேருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு, கேரளா,மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளது.

தமிழ்நாட்டில், 2,413 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவான நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 18,687ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் புதிதாக 4,172 பாதிப்புகள் பதிவான நிலையில், சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 28,891ஆக அதிகரித்துள்ளது. இந்த இரு மாநிலங்களைப் போலவே டெல்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுகிறது.