ஜப்பான் முன்னாள் பிரதமர் மரணத்தை கொண்டாடி சர்ச்சையில் சிக்கிய சீனர்கள்

0
380

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த போது சுட்டு படுகொலை செய்யப்பட்டார். 67 வயதான ஷின்சோ அபே, ஜப்பானின் பிரதமராக நீண்ட காலம் இருந்தவர் என்ற பெருமையை கொண்டவர். ஷின்சோ அபேவின் படுகொலை உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவரின் மரணத்தை சீன நாட்டில் பலர் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் முன்னணி சமூக வலைத்தளமான வெய்போவில் சீன மக்கள் ஷின்சோ அபேவின் படுகொலை நல்ல செய்தி எனவும், அவரை கொன்ற நபர் ஒரு ஹீரோ எனவும் பாராட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் சீனா இடையேயான வரலாற்று ரீதியான பகைமை உறவின் நீட்சியாகவே இது போன்ற வெறுப்பு பதிவுகள் சீனா மக்களால் பதிவிடப்படுகிறது. இரண்டாம் உலகப் போரின் போது சீனாவை ஜப்பான் படையெடுத்ததை நினைவு கூர்ந்த சீன மக்கள் அந்த போரில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக இந்த மரணம் இருக்கும் என பதிவுகள் வெளியிட்டுள்ளனர்.

இந்தோ பசிப்பிக் பிராந்தியத்தில் சமீப காலமாக நிலவிவரும் சீனாவின் ஆதிக்கம் என்பது ஜப்பான் நாட்டிற்கு அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. ஜப்பானின் பிரதமராக இருந்த ஷின்சோ அபே இதை சிறப்பாக எதிர்கொண்டார். ஜப்பானின் கொள்கைகளை வடிவமைத்ததில் ஷின்சோ அபேவுக்கு முக்கிய பங்குகள் உள்ளது.

குறிப்பாக, இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்திற்குக் கடிவாளம் போடும் விதமாக இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டமைப்பு உருவாக முக்கிய காரணியாக விளங்கியவர் ஷின்சோ அபே. ஷின்சோ அபேவின் மறைவுக்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளன. மேலும், இந்தியாவில் ஒரு நாள் தேச துக்கம் அனுசரிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து அதன்படி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சர்வதேச பூகோள அரசியல் உறவு பின்னணியில் தான், ஷின்சோவின் மறைவை சீனர்கள் பலர் மகிழ்ச்சி உணர்வுடன் கொண்டாடி சர்ச்சையில் சிக்கியுள்ளனர்.

Previous articleமீண்டும் 19,000 நெருங்கிய தினசரி கொரோனா பாதிப்பு
Next articleநியூசிலாந்தில் நுழைந்தது குரங்கு அம்மை… ஒருவருக்கு பாதிப்பு உறுதி