மக்கள் அமைதி காக்க வேண்டும்: இலங்கை ராணுவ தளபதி வேண்டுகோள்

0
199

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இதை முன்பே உளவுத்துறை மூலம் அறிந்த கோத்தபய ராஜபக்சே தனது குடும்பத்தினருடன் தப்பி ஓடினார். தற்போது கடற்படை முகாம் தளத்தில் தஞ்சம் அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. மக்கள் போராட்டத்திற்கு பணிந்த கோத்தபய ராஜபக்சே வரும் 13 ஆம் தேதி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். அதேபோல், இலங்கையின் பிரதமராக சமீபத்தில் பொறுப்பெற்ற ரணில் விக்ரமசிங்கேவும் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இதனையடுத்து, அனைத்துக் கட்சிகள் அடங்கிய அரசு ஆட்சி அமைக்க தயாராகி வருவதாக இலங்கை செய்தி ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

இலங்கையில் நிலவும் நெருக்கடியை அண்டை நாடான இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த நிலையில், இலங்கை முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டு வரும் சூழலில், அமைதியை நிலை நிறுத்த மக்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று இலங்கை ராணுவ தளபதி ஷவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். அமைதியை நிலை நாட்ட பாதுகாப்பு படையினருக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். இலங்கையில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலில் மந்திரிகளும் அடுத்தடுத்து தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். கடந்த 2 நாட்களில் மட்டும் 4 மந்திரிகள் பதவியில் இருந்து விலகியுள்ளனர்.

Previous articleபதவி விலகிய பிரதமர் : தொடரும் போராட்டம் – இலங்கையில் சர்வ கட்சி ஆட்சி..?
Next articleசந்திரமுகி-2 படத்தில் இணையும் பிரபல நடிகை