இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டம்… ஒருவர் உயிரிழப்பு

0
188

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. அதன் அண்டை நாடான இந்தியா உரம், மருந்து உள்ளிட்ட பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால், அந்நாட்டில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு இன்று அதிகாலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், இலங்கையின் இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவை, கோத்தபய ராஜபக்சே நியமித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின. இதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னிட்டு நெருக்கடி நிலை உத்தரவை பிறப்பித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாட்டின் மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளார். போராட்டக்காரர்கள் பிரதமர் இல்லத்திற்கு வெளியேயும், குவிந்து உள்ளனர். அவர்கள் பிரதமர் இல்ல கட்டிட உச்சிக்கு சென்று தேசிய கொடியையும் ஏற்றினர். இதனை அடுத்து, பிரதமர் இல்லத்திற்கு வெளியே குவிக்கப்பட்ட பாதுகாப்பு படையினர் கூட்டத்தினரை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளனர். இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கையை எடுக்க என்ன செய்ய வேண்டுமோ அதனை மேற்கொள்ளுங்கள் என ராணுவம் மற்றும் போலீசாருக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார்.

இந்த சூழலில், இலங்கையில் அதிபர் கோத்தபயா அரசுக்கு எதிராக கல்லே பேஸ் கிரீன் பார்க் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 4 பேர் சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்கள் கொழும்பு மற்றும் வெல்லம்பிடியா ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள். 17 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது. கொழும்புவில் நேற்று நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட மோதலில் 9 ஆண்கள், ஒரு பெண் என 10 பேர் காயமடைந்தனர். பின்பு அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிரதமர் அலுவலகம் வெளியே பிளவர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 26 வயது நபர் ஒருவர் போலீசாரின் கண்ணீர் புகை குண்டு வீச்சால் பாதிக்கப்பட்டு கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்து விட்டார் என அந்நாட்டின் டெய்லி மிர்ரர் தெரிவித்து உள்ளது.

Previous articleபோராட்டம் தீவிரம்… இலங்கையில் சேவைகளை ரத்து செய்தது அமெரிக்க தூதரகம்
Next articleஊழியர்களை பணியமர்த்துவதை குறைக்க கூகுள் நிறுவனம் முடிவு