இலங்கை கடுமையான பொருளாதார நிதி சிக்கலில் தவித்து வருகிறது. உள்நாட்டில் வெடித்துள்ள மக்கள் போராட்டம் காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது மனைவி மற்றும் பாதுகாவலர்களுடன் மாலத்தீவுக்கு தப்பிச் சென்றார். அவர் அங்கிருந்து சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மாலத்தீவில் இருந்து சிங்கப்பூர் செல்லவிருந்த விமானத்தை தவறவிட்ட கோத்தபய ராஜபக்ச தனியார் ஜெட் விமானம் மூலம் சிங்கப்பூர் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தய ராஜபக்சே தப்பிச் செல்வதற்கு இந்தியா உதவியதாக சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இதனை இந்திய அரசானது திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக கொலும்புவில் உள்ள இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சர்ச்சை தொடர்பாக கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் ட்விட்டரில் ஒரு பதிவு வெளியிட்டது.
அந்தப்பதிபில், இலங்கையில் இருந்து கோத்தபய ராஜபக்சே வெளியேறி பயணிக்க இந்தியா உதவியதாக சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இதை இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது. இது ஆதாரமற்றது, ஊகத்தின் அடிப்படையிலானது” என தெரிவித்துள்ளது. மேலும், “இலங்கையில் ஜனநாயக அமைப்புகள், அரசியல் சாசன கட்டமைப்புகள் வழியாக முன்னேற்றத்துக்கான எதிர்பார்ப்புகளை நனவாக்குவதற்கு அந்த நாட்டு மக்கள் முயற்சிக்கின்றனர். இதற்கு இந்தியா ஆதரவு அளிக்கும்” எனவும் கூறப்பட்டுள்ளது.