இலங்கையில் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு, அதிகார மாற்றம்…ஐநா வேண்டுகோள்

0
192

இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் சிக்கி தவித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்பின்னர், கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். எனினும், போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தனது குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபயா தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு கடந்த 13ந்தேதி காலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியானது.

இதன்பின் கோத்தபய ராஜபக்சே, மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். இலங்கையில் பல வார போராட்டங்களுக்கு பின்னர், கடந்த வியாழ கிழமை இலங்கை அதிபர் கோத்தபயா பதவி விலகினார். இந்நிலையில், அந்நாட்டில் உள்ள ஐ.நா. தூதரகத்தின் இல்ல ஒருங்கிணைப்பாளர் ஹனா சிங்கர், அரசியல் சாசனத்திற்கு முழு மரியாதை அளிக்கும் வகையில், அமைதியான முறையில் அதிகார பரிமாற்றம் நடைபெற வேண்டும். இதனை அனைத்து அரசியல் உறுப்பினர்களும் உறுதி செய்ய வேண்டும் என ஐ.நா. சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். இலங்கையில் காணப்படும் ஸ்திரமற்ற நிலை மற்றும் பொதுமக்களின் தீர்க்கப்படாத குறைகள் ஆகியவற்றுக்கான மூலக்காரணங்களை கண்டறிந்து தீர்வு காண்பது மிக அவசியம் என ஐ.நா. பொது செயலாளர் ஆன்டனியோ கட்டிரஸ் சுட்டி காட்டியுள்ளவற்றையும் சிங்கர் நினைவு கூர்ந்துள்ளார். இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு, அனைத்து அரசியல் உறுப்பினர்களுடனான பேச்சுவார்த்தையே சிறந்த வழி என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleஇலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காண ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை
Next articleபுதிய படத்திற்கு சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய நயன்தாரா