இலங்கையில் விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை ஆகியவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் ஆகியவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை இல்லாத வகையிலான எரிபொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கி தவித்து வருகிறது. இந்த சூழலில், இலங்கைக்கு இந்தியா ஆதரவுகரம் நீட்டியுள்ளது. கோதுமை உள்ளிட்ட உணவு பொருட்கள், உரம், எரிபொருள் போன்றவற்றை தீவு நாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது. எனினும், இலங்கையில் நெருக்கடியான சூழல் நீடித்து வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிரான போராட்டங்களை தொடர்ந்து, சிங்கப்பூர் தப்பி சென்ற அவர், அதிபர் பதவியில் இருந்து விலகினார்.
இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பொறுப்பு ஏற்ற நிலையில், புதிய அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்று கொண்டார். எனினும், அவருக்கு எதிராகவும் போராட்டங்கள் நீடித்து வருகின்றன. இந்த சூழலில், கொழும்பு நகரில் உள்ள இலங்கைக்கான இந்திய தூதரகத்தின் தூதர் கோபால் பாக்ளே செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, எனக்கு தெரிந்து இலங்கைக்கு இந்தியா வழங்கி வரும் உதவி மற்றும் ஆதரவு வேறு எந்த நாட்டுக்கும் இதுவரை வழங்கப்படவில்லை. இலங்கை மக்களின் தேவையானவற்றுக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்போம். இலங்கை மக்களுடன் இந்தியா எப்போதும் துணை நிற்கிறது. இலங்கை எங்களுடைய நெருங்கிய நண்பர், பங்குதாரர் மற்றும் நாங்கள் இருவரும் ஜனநாயக நாடுகள். அதனால், பெரும் அவசரமுடன் அவர்களிடம் இருந்து உதவி கோரப்பட்டபோது, இலங்கையின் உதவிக்கு இந்தியா முன்வந்தது என கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து ரூ.5589.78 கோடி மதிப்பிலான எரிபொருள் வினியோகம் இலங்கையை வந்தடைந்து உள்ளது. வர்த்தக வினியோகங்களும் தொடருகின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்ய பிறரிடமும் இலங்கை அரசு எதிர்பார்த்து இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.