அனைத்துலக விண்வெளி நிலையத்திலிருந்து விலகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்நடவடிக்கை செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.
உக்ரேன் விவகாரத்தின் தொடர்பில் ரஷ்யாவுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே பூசல் தொடரும் வேளையில் இத்தகவல் வெளிவந்துள்ளது.
ரஷ்யாவும் அமெரிக்காவும் அனைத்துலக விண்வெளி நிலையத்தில் 1998-ஆம் ஆண்டிலிருந்து இணைந்து பணியாற்றுகின்றன.
2024-ஆம் ஆண்டுக்குள் ரஷ்யா அதன் சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கத் தொடங்கும் என்று அந்நாட்டு விண்வெளி அமைப்பின் புதிய தலைவர் யூரி போரிசொவ் (Yury Borisov) குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேன்மீது ரஷ்யா படையெடுக்கத் தொடங்கியதிலிருந்து விண்வெளி உட்பட சில அம்சங்களில் மட்டுமே அமெரிக்க-ரஷ்ய ஒத்துழைப்பு பாதிக்கப்படவில்லை. அந்த ஒத்துழைப்பும் இனி துண்டிக்கப்படவுள்ளது.