டெல்லியில் மேலும் ஒருவருக்கு குரங்கம்மை.. இந்தியாவில் மொத்த பாதிப்பு 9ஆக உயர்வு

0
381

டெல்லியில் மேலும் ஒரு நபருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 9ஆக அதிகரித்துள்ளது. நைஜீரிய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண்மணிக்கு இந்த குரங்கம்மை பாதிப்பானது ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் குரங்கம்மை பாதிப்புக்கு ஆளான முதல் பெண் இவரே. ஏற்கனவே, டெல்லியில் வசிக்கும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இரு ஆண்களுக்கு குரங்கம்மை பாதிப்பு பதிவாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் டெல்லியில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருவதை அடுத்து அங்கு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் 70 தனிமைபடுத்தும் மையங்களை அமைத்துள்ளது. மக்களின் சுகாதார நலனே பிரதானம் என்பதால், தேவைப்படும் பட்சத்தில் படுக்கைகள் எண்ணிக்கை மேலும் உயர்த்தப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்தியாவில் நோய் பரவலை கண்காணிக்க பிரத்தியேக குழு ஒன்றை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைத்துள்ளது. நாட்டின் முதல் குரங்கம்மை பாதிப்பு கேரளாவில் பதிவானது. இதுவரை கேரளாவில் ஐந்து பேர், டெல்லியில் நான்கு பேர் என மொத்தம் ஒன்பது பேருக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவைச் சேர்ந்த ஒருவர் மட்டும் இதுவரை இந்த தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். உலகளவில் 75க்கும் மேற்பட்ட நாடுகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Previous articleகமல் ஹாசனின் இந்தியன் 2-வில் தீபிகா படுகோன்?
Next articleஆஸ்திரேலியாவை அதிர வைத்த துப்பாக்கிச்சூடு – மூன்று பேர் பரிதாபமாக உயிரிழப்பு