
தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்பின் முடிவின் படி, குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்ப வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோலியர்ஸ் மற்றும் அவ்ஃபிஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பின்படி, கொரோனா தொற்றின் தாக்கம் வெகுவாக குறைந்து வருவதால், தொலைத்தொடர்பு மற்றும் கன்சல்டிங் துறைகளில் உள்ள பெரும்பாலான ஊழியர்கள் அலுவலகத்திற்குத் திரும்பியுள்ளதாகவும், புதிய தொழில்நுட்ப நிறுவனங்களின் வருவாய் விகிதம் மிகவும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டு வருடமாக இருந்து வந்த கொரோனா தொற்று பரவல் தற்போது குறைந்து வருவது, ஊழியர்கள் அலுவலகங்களுக்குத் திரும்ப உத்வேகம் அளித்து வருகிறது. சுமார் 74 சதவீத நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்குப் பதிலாக, சக ஊழியர்களுடன் அலுவலகத்தில் பணியாற்றுவதையே விரும்புகின்றனர். இது வணிகங்களுக்கான உற்பத்தித்திறன் ஆதாயங்களை அதிகரிக்கப்பதோடு, ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ‘ஃப்ளெக்ஸ் ஸ்பேஸ்’ முறைப்படி ஊழியர்கள் எளிதில் அணுகக்கூடிய இடங்களில் அலுவலகங்களை அமைக்கவும் முன்வந்துள்ளன.
ஆய்வின்படி, ஐ.டி. துறைகளில் உள்ள மிகப்பெரிய நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்து வர, வசதியான அலுவலகம் மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க பணித்திட்டத்தை உருவாக்க விரும்புவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் நிறுவனங்கள் பெருநகர் நகரங்களில் மட்டுமின்றி, பெருநகர் நகரங்களுக்கு அடுத்தபடியாக உள்ள சிறிய நகரங்களிலும் அலுவலகங்களை அமைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 2022ம் ஆண்டின் இறுதிக்குள் பெருநகர் அல்லாத நகரங்களில் பெரிய நிறுவனங்களின் அலுவலகங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்து, 5.5 மில்லியன் சதுர அடியாகப் பரந்து விரியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
ஊழியர்களுக்கு வசதியான இடங்களில் அலுவலகங்களை அமைப்பதால் நேரம் மற்றும் செலவு குறையும் என 79 சதவீத நிறுவனங்கள் கருதுகின்றன. 77 சதவீத நிறுவனங்கள் ஃப்ளெக்ஸ் ஸ்பேஸ்களைத் தங்களது பணியிடத்திற்கான யுக்தியாகப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன. இது பல்வேறு தேவையற்ற செலவைக் குறைக்க உதவும் என்றும் கருதப்படுகிறது. ஃப்ளெக்ஸ் ஸ்பேஸ்களைத் தேர்ந்தெடுக்கும் போது வேலை-வாழ்க்கை சமநிலை, மனநலம் மற்றும் குழு உற்பத்தித்திறன் ஆகியவையும் சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 3.5 மில்லியன் சதுர அடி அலுவலகங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டுள்ளன. இது ஒட்டுமொத்த குத்தகை அளவில் 13 சதவீதம் ஆகும். மேலும் இது ஃப்ளெக்ஸ் ஸ்பேஸுக்கான தேவை அதிகரித்து வருவதைச் சுட்டிக்காட்டுகிறது.
இ-காமர்ஸ் மற்றும் கன்சல்டிங் துறைகளைச் சேர்ந்த 90 சதவீத நிறுவனங்கள் தங்களது போர்ட்ஃபோலியோவில் ஃப்ளெக்ஸ் ஸ்பேஸ் குறித்துக் குறிப்பிட வாய்ப்புள்ளது. அணுக எளிதாக இருக்கக்கூடிய இடங்களில் அலுவலகத்தை அமைப்பதன் மூலமாக நிறுவனத்திற்கு நேரம் மற்றும் குறைந்த செலவினமும், ஊழியர்களுக்கு வொர்க் லைப் பேலன்ஸ் என ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிக்க நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.