Newsஆஸ்திரேலியாவின் அதி உயர் இலக்கிய விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஈழத்தைச் சேர்ந்த...

ஆஸ்திரேலியாவின் அதி உயர் இலக்கிய விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஈழத்தைச் சேர்ந்த பெண் எழுதிய நாவல்

-

ஆஸ்திரேலியாவின் THE MILES FRANKLIN அதி உயர் இலக்கிய விருதுக்கான இறுதிப் பட்டியலில் ஈழத்தைச் சேர்ந்த சங்கரி சந்திரன் எழுதிய Chai Time at Cinnamon Gardens நாவல் இடம்பிடித்திருக்கிறது.

1957 ஆம் ஆண்டு முதல் ஆஸ்திரேலியாவில் இலக்கியத்துக்காக வழங்கப்பட்டுவருகின்ற THE MILES FRANKLIN LITERARY AWARD என்ற உயரிய விருதினை வெற்றிகொள்பவருக்கு அறுபதினாயிரம் ஆஸ்திரேலிய டொலர்கள் வழங்கப்படும்.

இறுதிப்பட்டியலுக்குள் இடம்பிடித்து – விருது பெறாத – ஏனைய ஐவருக்கும் தலா ஐயாயிரம் டொலர்கள் வழங்கப்படும்.

இலங்கையின் வடக்கே அளவெட்டியென்ற கிராமத்திலிருந்து லண்டனுக்குப் புலம்பெயர்ந்த சங்கரி, தொழில்முறை சட்டத்தரணியானார். அங்கிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர், அவர் எழுதிய மூன்றாவது நாவல் Chai Time at Cinnamon Gardens.

குடியேற்றவாசிகளின் பிரச்சினைகளை ஆஸ்திரேலியாவின் பெரும்பான்மை சமூகத்திடம் எடுத்துச்செல்கின்ற வகையில், இங்கு வருடத்துக்கு பத்து நாவல்களாவது வெளிவந்துகொண்டுதானிருக்கின்றன. வெவ்வேறு நாட்டுப் பின்னணிகளையுடைவர்கள், இந்த நாட்டுக்கு வந்து பட்ட துன்பங்கள், தங்கள் குடும்ப பட்ட கஷ்டங்கள் என்று பலதை எழுதிக்குவிக்கிறார்கள். ஒவ்வொருவர் பார்வையில் அவரவர் பிரச்சினைகளும் அவர்களது சிறிய உலகம் சந்தித்த இடர்களும் இந்தப் புத்தகங்களில் பெரிதாக அறைந்து கூறப்படுகின்றன.

ஆனால், சங்கரி சந்திரனின் Chai Time at Cinnamon Gardens நாவல் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்து வந்த குடும்பமொன்றின் வழியாக – வழக்கம்போல – எல்லாப் பிரச்சினைகளையும் பேசியிருப்பதோடு மாத்திரமன்றி, ஆஸ்திரேலிய பூர்வகுடிகளோடு ஒரு தரப்பாக நின்று, ஆஸ்திரேலியா புனைந்து வைத்திருக்கும் இறையாண்மை – ஒருமைப்பாடு போன்ற கறைபடிந்த விழுமியங்களைக் கேள்விக்கு உட்டுபடுத்தும் வகையில் ஒரு அரசியல் பிரதியாக, புதிய தரப்பை எடுத்துக்கொள்கிறது.

எழுபதுகளில் இலங்கையிலிருந்து சிட்னிக்கு புலம்பெயர்ந்து வருகின்ற தமிழ் குடும்பம், சிட்னியில், வயோதிபர் இல்லமொன்றைத் தொடங்குகிறார்கள். ஸாஹிர் – மாயா என்ற இந்தத் தம்பதிகளால் நடத்தப்படுகின்ற வயோதிபர் இல்லத்தின் வழியாக புலம்பெயர்ந்து வாழுகின்ற பல்வேறு சமூகங்களினதும் முரண்பட்ட பல மனநிலைகளை நரைமாறாமல் நாவலுக்குள் அழகாகக் கொண்டுவந்துவிடுகிறார் சங்கரி. அந்த வயோதிபர் இல்லத்திலிருந்து – ஆஸ்திரேலியாவிற்கு முதன் முதலாக வந்து இறங்கியவர் – ஆஸ்திரேலியாவினைக் கண்டுபிடித்தவர் என்றெல்லம் போற்றப்படுகின்ற – கப்டன் குக் அவர்களது சிலையை இடித்துத் தள்ளுவதிலிருந்து, நாவல் பல விவாதங்களை ஆரம்பிக்கிறது.

மஹாவம்சம் என்ற பொய்நூலின் மீது கட்டமைக்கப்பட்ட இலங்கையின் வரலாற்றைப் போல, கப்டன் குக் என்பவரின் வருகையோடு ஆஸ்திரேலியாவின் வரலாற்றைக் கட்டியெழுப்புகின்ற, அயோக்கியத்தனத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஸாகிர் – மாயா தம்பதிகளின் மகளான அஞ்சலி, நவ ஆஸ்திரேலியாவின் அரசியல் ஆன்மாவின் மீது கை வைத்துவிடுகிறார். கப்டன் குக்கின் சிலையை அகற்றியதற்காக, சிறிலங்கர்கள் நடத்துகின்ற வயோதிப இல்லத்தினை நிறவெறிபிடித்தவர்கள் என்று கவுன்ஸில் நோட்டீஸ் அனுப்ப, நீதிமன்றம்வரை போகின்ற சிக்கல் எவ்வாறெல்லாம் விகாரம் கொள்கின்றது என்று நாவல் விரிகிறது.

வெறுமனே ஆஸ்திரேலிய அரசியலுக்குள் நின்று விடாது, தனது பாத்திரங்களின் பின்னணிகளை இலங்கையின் பல்வேறு அரசியல் சம்பவங்களோடும் – அதன் பாதிப்பக்களோடும் – கோர்த்துக்கொண்டே போகிறார் நாவலாசிரியர். தொழில்முறை சட்டத்தரணி என்ற காரணத்தினால், தர்க்கவிசாரங்களோடு நாவலை இறுக்கமாகியிருக்கிறார். தனது வாதங்களை பெறுமதியோடு எழுதுவதற்காக பாத்திரங்களை நாவலுக்குள் வலிந்துகொண்டுவந்திருப்பது சில வேளைகளில் துருத்திக்கொண்டுநிற்கிறது. அது ஆங்கில வாசகர்களுக்குப் பாடமெடுப்பதற்கு நாவலாசிரியர் மேற்கொண்டுள்ள உத்தியென்று கடந்து சென்றுவிடலாம். மற்றும்படி, புத்தகத்தின் விலை 32 டொலர் என்பதைத் தவிர, பெரிதாகக் குறைசொல்ல ஒன்றுமில்லை.

ஆஸ்திரேலிய – இலங்கை அரசியலையும் புலம்பெயர்தலையும் சமூக ஊடாட்டங்களையும் கலாச்சார முரண்களையும் கிட்டத்தட்ட நேர்த்தியாகவே கொண்டுவந்திருக்கின்ற முதலாவது ஆங்கிலத்தில் நாவல் இதுவாகத்தானிருக்கும். ஆஸ்திரேலியாவின் அதி உயர் இலக்கிய விருதுக்கான பட்டியலில் இடம்பெற்றிருப்பது பெருமையே. எதிர்வரும் 25 ஆம் திகதி வெற்றியாளர் யார் என்பது தெரிந்துவிடும்.

Latest news

நோயாளியின் மரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டுள்ள பெரிக்கி மருத்துவமனை

விக்டோரியாவின் மிகப்பெரிய சுகாதார சேவை வழங்குநரான மோனாஷ் ஹெல்த் மருத்துவமனை குழுமத்தின் ஒரு பகுதியான பெரிக்கில் உள்ள மோனாஷ் ஹெல்த் கேசி மருத்துவமனைக்கு $160,000 அபராதம்...

புற்றுநோய் தொடர்பில் கண்டறியப்பட்டுள்ள புதிய தகவல்

புற்றுநோய் உருவாவதற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பே இரத்தத்தில் மாற்றம் ஏற்படுவதாக சமீபத்திய புற்றுநோய் ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. புற்றுநோயுடன் தொடர்புடைய ரத்தத்தில் உருவாகும் புரதத்தை ஏழு ஆண்டுகளுக்கு முன்பே...

எமிரேட்ஸ் நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள சாதனை போனஸ்

எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் தனது ஊழியர்களுக்கு 20 வார சம்பளத்திற்கு இணையான போனஸ் வழங்கியுள்ளது. துபாயின் முதன்மையான விமான நிறுவனமான எமிரேட்ஸ் வியாழன் அன்று அனைத்து நிறுவன ஊழியர்களுக்கும்...

விக்டோரியாவை முதல் இடத்திற்கு கொண்டு வந்த ஆய்வு

ஆஸ்திரேலிய அதிகார வரம்புகளின் பொருளாதார செயல்திறன் குறியீட்டில் விக்டோரியா முதல் இடத்தில் உள்ளது. முன்னதாக, விக்டோரியா மாநிலம் குறியீட்டில் ஐந்தாவது இடத்தைப் பெற்றிருந்தது மற்றும் தொடர்புடைய குறியீட்டை...

ஆஸ்திரேலியாவில் மாறுபடும் வேலையின்மை விகிதம்

ஆஸ்திரேலியாவின் வேலையின்மை விகிதம் ஏப்ரல் மாதத்தில் 0.2 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளது மற்றும் வேலையின்மை கடந்த...

ஆஸ்திரேலியர்களின் தனிப்பட்ட சுகாதார தரவு ஆபத்தில் உள்ளதா?

இ-ப்ரிஸ்கிரிப்ஷன்களை விநியோகிக்கும் MediSecure, மக்களின் தனிப்பட்ட தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் செயற்படுத்தப்படும் இந்த சேவையை பயன்படுத்துபவர்களின் தனிப்பட்ட சுகாதார தரவுகளுக்கு ஆபத்து...